பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் கசிந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று பிற்பகல் வெளியாக இருந்த டிரெய்லர், காலையிலேயே இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
கசிந்தது எப்படி?
ஓம் ராவத் இயக்கதில் பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் 3டி-யில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். புராண கதையானா ராமாயணத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், அடுத்த மாதம் 16ம் தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து இந்த படத்திற்கான விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று பிற்பகல் 1.53 மணியளவில் ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, ஐதராபாத்தில் நேற்று குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் படத்தின் டிரெய்லர், சிறப்பு திரையிடல் மூலம் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரபாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சிக்கு வந்த யாரோ ஒருவர் முழு டிரெய்லரையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
படக்குழு தீவிரம்:
புதிய டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே வெளியான டீசரை காட்டிலும், புதிய டிரெய்லர் சிறப்பாக உள்ளது என பாராட்டி வருகின்றனர். அதேநேரம், திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்த ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை, சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
விமர்சனத்திற்குள்ளான ”டீசர்”
இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. ஆனால், அதில் இடம்பெற்று இருந்த 3டி காட்சிகள் பொம்மை படம் போன்று இருப்பதாகவும், ராமரை தவறாக சித்தரிக்கும் வகையில் பிரபாஸின் தோற்றம் இருப்பதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தான் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்த முடிவு செய்த படக்குழு, கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகவிருந்த ஆதிபுருஷ் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மேம்படுத்தப்பட்ட காட்சிகள் உடன், ஐமேக்ஸ் மற்றும் 3-டி வடிவில் வரும் 16ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
ஆதிபுருஷ் பட்ஜெட்:
ஓம் ராவத் இயக்கத்தில் ரூபாய் 700 கோடி செலவில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் இந்திய சினிமாவின் மிகவும் அதிகப்படியான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். கொரோனா தொற்று, விசுவல் எஃபக்ட்ஸை மேம்படுத்துவது போன்ற காரணங்களால் இந்த படத்தின் பட்ஜெட் கணிக்கப்பட்டதை பிட அதிகரித்தது.