கடந்தாண்டு மலையாளத்தில் “அய்யப்பனும், கோஷியும்” என்ற திரைப்படம் வெளியானது. இரண்டு கதாநாயகர்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட இந்த படத்தில் பிஜூமேனன் மற்றும் பிரித்விராஜ் சுகுமாறன் பிரதான கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த படத்தை பல்வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வந்தது. இதையடுத்து, தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது. படத்தின் நாயகனாக பவன் கல்யாணும், பாகுபலி வில்லன் ராணாவும் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டு, படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடித்துள்ள இந்த படத்திற்கு “பீம்லா நாயக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரும், படத்திற்கான போஸ்டரும், ஒரு சிறு டீசரையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.
பவன் கல்யாண் சட்டை மற்றும் லுங்கியுடன் கோபத்துடன் நடந்துவரும் இந்த டீசருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான இந்த டீசரை யூ டியூப்பில் மட்டும் இதுவரை 10 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளனர். படத்திற்கான போஸ்டர் மற்றும் டீசரில் பவன்கல்யாண் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் திரைக்கதை எழுதியுள்ளார். சக்கார் கே சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு நவீன்நூலி எடிட் செய்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. பீம்லா நாயக் அடுத்தாண்டு மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. பவன்கல்யாணின் நடிப்பில் கடைசியாக வக்கீல் சாப் திரைப்படம் இந்தாண்டு வெளியாகியிருந்தது. அந்த படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்றது. பீம்லா நாயக் படத்துடன் ஹரி ஹரி வீரமல்லு படத்திலும் பவன் கல்யாண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.