கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game Of Thrones)


ஆங்கிலத்தில் பிரபல வெப் சீரிஸ்களில் ஒன்று கேம் ஆஃப் த்ரோன்ஸ். ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'.  கடந்த 2011ஆம் முதல் ஒளிப்பரப்பான இந்தத் தொடர், 2019ஆம் ஆண்டுவரை மொத்தம் எட்டு ஆண்டுகள் நீடித்தது. முதலில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்தத் தொடர் காலப்போக்கில் இந்திய ரசிகர்களிடம் மிகப் புகழ்பெற்ற தொடராக மாறியது. கற்பனையான ஒரு வரலாற்றுக் கதை என்கிற போதிலும் இந்த தொடரின் கதைப்பின்னல், காட்சியமைப்புகள் ரசிகர்களை வியக்க வைத்தன.


கடைசி சீசன்


ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் எழுதிய நாவல்களை அடிப்பையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் தொடரின் கடைசி சீசன் மட்டும் அவரது அடுத்த புத்தகம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் சவால்களை சந்தித்தது. பல ஆண்டுகளாக இந்தத் தொடரை பார்த்து வந்த ரசிகர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் தங்களால் காத்திருக்க முடியாது என்று கூறினர்.


மேலும் இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் ஒரே தொடருக்காக உழைத்திருந்தார்கள். இதன் காரணத்தினால் இந்தத் தொடரின் இயக்குநர்களே இந்த கடைசி சீசனை எழுதி இயக்கினார்கள். இதனைத் தொடர்ந்து இந்தத் தொடரின் முடிவு ரசிகர்களுக்கு திருப்திகரமானதாக இருக்கவில்லை. புத்தகத்தைத் தழுவி எடுத்திருந்தால் இந்த தொடர் இன்னும் மூன்று சீசன்கள் தொடரவேண்டியதாக இருந்ததால் படக்குழு இந்த முடிவை எடுத்தது.


ஓடிடியில் இருந்து நீக்கம்


HBO Max தயாரித்த இந்தத் தொடர் ஹாட்ஸ்டாரின் பார்க்க கிடைத்து வந்த நிலையில் HBO Max இந்த தொடரை நீக்கி தங்களது ஓடிடி தளத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். மேலும் முழுக்க முழுக்க ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடர் இடைக்காலத்தில் இந்தியிலும் பார்க்க கிடைத்தது. மனி ஹைஸ்ட் மாதிரியான தொடர்கள் தமிழில் வெளியானப் பின்பும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் தமிழில் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றமாகவே இருந்தது. 


தமிழ் டப்பிங்கில் வெளியானது 


தற்போது HBO Max உடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி பல ஆங்கிலத் தொடர்கள் இந்திய மொழியில் வெளியிடும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது ஜியோ சினிமா. அந்த வகையில் தற்போது கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் ஜியோ சினிமாவில் வெளியாகி  வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரை ஆங்கிலத்தில் பார்க்காதவர்கள் இனிமேல் இந்தத் தொடரை தங்களது மொழியில் பார்த்து ரசிக்கலாம்.