பிரபல சீரியல் நடிகர் பிரித்விராஜ் தனக்கும், மலேசிய பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதல் கதையை பகிர்ந்து இருக்கிறார்.
பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாவனர் நடிகர் பிரித்விராஜ். கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ‘சுவர்கள்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சிவாஜி, ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். பப்லு பிரித்விராஜ் என்று திரை வட்டாரத்தில் அழைக்கப்படும் இவர், மர்மதேசம் என்ற சீரியலில் நடித்ததின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது அவர் சன்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் கதாநாயகின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருக்கும் இவருக்கு, கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆஹத் என்ற மகன் (மாற்றுத்திறனாளி) உள்ளார். வாழ்கை நன்றாக சென்றுக்கொண்டிந்த நிலையில் பிரித்விக்கும், அவரது மனைவிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.
இந்த நிலையில் பிரித்விராஜ் 24 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இதனைக்கேட்ட பிரித்விராஜ் ஆம், நாங்கள் இருவரும் கல்யாணம் செய்ய இருப்பதை உறுதி செய்தார். ஆனால் சமூக வலைதளங்களில் பலர், இந்த வயதில் இவருக்கு தேவையா?, மகன் இருக்கும் போது எப்படி திருமணம்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் விளக்கம் அளித்து வருகிறார்.
இது குறித்து பேசிய பப்லு பிரித்திவிராஜ், “ பெங்களூரில் இவரது தோழி மூலமாகத்தான் என்னுடன் ஷீத்தில் அறிமுகமானார். அவர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த செல்ஃபிதான் எங்களை இணைத்த தருணம். அப்படித்தான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டோம். பேசினோம்.
காதல் மலர்ந்தது எப்படி?
என்னுடைய வாழ்கையில் 6 வருடமாக நான் பல வித சங்கடங்களை சந்தித்து வந்தேன். தனிமை அதிகமாக இருந்தது. எனக்கு யாருடனாவது பேச வேண்டும் என்பது போல இருக்கும். அந்த சமயத்தில் ஷீத்திலுக்கும் அவரது வேலையில் ஏகப்பட்ட பிரச்னைகள் அதனால் அவரும் அந்த வேலையில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து இருந்தார்.
அந்த சமயத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது, நாம் ஏன் புத்தாண்டை இணைந்து கொண்டாடக்கூடாது என்று கேட்டேன். அதற்காக ஷீத்தில் சென்னை வந்தார். அந்த பழக்கம், காதலாக மாறியது தற்போது கல்யாணம் வரை வந்திருக்கிறது. ஆனால் இதற்கிடையில் எங்களுக்குள் வயது வித்தியாசம் என்பது பெரிய பூதாகர பிரச்னையாக இருந்தது. காரணம் எனக்கு 56 வயது, ஷீத்திலுக்கு 24 வயது. நான் அதை அவரிடம் சொன்ன போது, அவர் என்னிடம் வயது ஒரு நம்பர் என்று நீங்கள்தானே சொல்வீர்கள்.. எனக்கும்தான் வயது ஆகப்போகிறது என்று அதனை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை என்று ஆக்ரோஷமாக சொன்னார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.” என்று பேசியுள்ளார்.