மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ஒரு மாடலாக இருந்து இன்று தென்னிந்தியாவின் முன்னணி வெட்டிங் பிரைடல் ஆர்டிஸ்டாக வளர்ந்துள்ளார் அஸ்மிதா நீலமேகம். அவரின் இந்த பயணம் அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. 20 வயதில் தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்த அஸ்மிதாவுக்கு இது அவரது லட்சியம் அல்ல என்பதை உணர்ந்த பிறகு அன்று அவரின் நண்பரும் இன்று கணவருமான விஷ்ணு வழிகாட்டுதலின் படி மும்பைக்கு சென்று மேக்கப் சார்ந்த கல்வியை மேற்கொண்டுள்ளார்.
சென்னைக்கு திரும்பிய பிறகு அவர் கற்றுத்தேர்ந்த தொழில்நுட்பங்கள் தென்னிந்திய ஸ்கின்னுக்கு பொருந்தாது என்பதை பிறகு தான் உணர்ந்துள்ளார். கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தீராத ஆர்வம் தான் அஸ்மிதாவின் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட்ரி தற்போது வளர்ந்து வரும் பிளாட்பார்மாக மாறியுள்ளது. ஃபேஷன் பற்றிய ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகி வருவதால் பலரும் இந்த துறையை தேர்வு செய்கிறார்கள்.
பிரபலமான மகளிர் டிஜிட்டல் இதழான SHE இந்தியா வழங்கிய 'The Most inspiring Make up artist " விருதை பெற்றுள்ளார். தன்னுடைய அகாடமி மூலம் 10000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி பயிற்சி கொடுத்து ட்ரெயின் செய்துள்ளார். அவரின் வளர்ச்சி பார்க்க பிரமிப்பாக இருந்தாலும் அவர் இந்த இடத்தை அடைய கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.
அஸ்மிதா நீலமேகம் உடன் பிறந்த சகோதரி திவ்யா நீலமேகமும் கேச பராமரிப்பு சார்ந்த துறையில் பிரபமானவராக திகழ்கிறார். தன்னுடைய அக்கா மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை என அனைத்தையும் தாண்டி அவருடைய தங்கை என சொல்வதை பெருமையாக கருதுகிறார். இருவருக்கும் 7 வருட வித்தியாசம் இருப்பதால் அவர்களுக்குள் அம்மா - மகள் உறவு தான் உள்ளது. அக்கா தங்கை இருவரும் உருவத்தில், நிறத்தில் என பல வகையிலும் வித்தியாசமாக இருப்பதால் இன்றும் அவர்களுக்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதாக அவர்களே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர். முதலில் அவை மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் போக போக அது அனைத்தும் பழகிப்போனது என்றும் இப்போது எல்லாம் அவற்றை கண்டுகொள்வதே இல்லை என்று தெரிவித்து இருந்தனர்.
தற்போது அஸ்மிதா தன்னுடைய தங்கைக்காக வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். அதை மிகவும் சர்ப்ரைஸாக திவ்யாவுக்கு வழங்கியுள்ளார் அஸ்மிதா. இதை பார்த்து மிகவும் எமோஷனலாகிவிடுகிறார் தங்கை திவ்யா. அந்த வீட்டின் கிரகப்பிரவேச வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஸ்மிதா நீலமேகம். வியந்து போன நெட்டிசன்கள் லைக்ஸ்கள் குவிந்து வருகிறார்கள்.