நடிகர் சல்மான் கான் ரொம்பவே உண்மையானவர், இனிமையானவர் என்று நெகிழ்ந்து பேசியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. நடிகர் சல்மான் கானுடன் இணைந்து கபி ஈத் கபி தீபாவளி (Kabhi Eid Kabhi Diwali) என்ற படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது:
சல்மான் கான் ரொம்பவே இனிமையானவர். ரொம்பவே உண்மையானவர். அவருடன் உரையாடுவது மிகவும் எளிது. நான் அவரிடம் எப்போதும் மனம் திறந்து பேசுவேன். சல்மான் யாரையாவது நேசித்தால் அந்த நேசம் உண்மையானதாக இருக்கும். இதை நான் அவரிடமே நான் பலமுறை ஒரு விஷயம் கூறியிருக்கிறேன். அதேபோல் ஒருவரை அவர் வெறுத்துவிட்டார் என்றால் அவ்வளவுதான் யாராலும் அந்த வெறுப்பை சரி செய்ய முடியாது. இந்த உலகில் சில நேரங்களில் எல்லாமே மேம்போக்கானதாக இருக்கிறது. ஆனால், சல்மான் போன்ற உண்மையான நபரைக் காண்பது அரிது என்று கூறினார்.
கபி ஈத் கபி தீபாவளி படத்தின் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியானது முதலே இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் என்ற சலசலப்பு நிலவுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீரம். அந்தப் படத்தில் 5 சகோதர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். அண்ணன் அஜித், திருமணம் செய்து கொண்டால் தங்களின் ஒற்றுமை குலைந்துவிடும் என நம்புவார். ஆனால் அவருக்கு தம்பிகள் அனைவரும் சேர்ந்து மணம் முடிக்க முயற்சிப்பார்கள். குடும்ப பாசத்தை எடுத்துக் கூறிய இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் அஜித், கிராமத்து பின்புலத்தை வைத்து உருவான இப்படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில் இதையேதான் இந்தியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சல்மான் கான், பூஜா ஹெக்டே ஜோடி ஏற்கெனவே தபாங் ரீலோடட் 'Dabangg Reloaded' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், படத்தின் இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜி கூறுகையில், நான் கிக் 2 படம் இயக்கும் முன்பே இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டேன்.சல்மான் கானுடன் நான் ஆறு வருட இடைவேளைக்குப் பின் இப்படத்தில் இணைதுள்ளேன். கபி ஈத் கபி தீபாவளி முற்றிலும் மாறுப்பட்ட கதை. இப்படம் நிச்சயம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமையும் சல்மான் கானை ரசிகர்கள் புதிய பரிமாணத்தில் பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.
படம் வந்தால் பவுசு தெரிந்துவிடும் தானே. இப்படம் 2023 ஏப்ரலில் வெளியாகும் எனத் தெரிகிறது.