ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி வர்மனா இல்லை அருள் மொழி வர்மனா என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 


அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவு நூல் பொன்னியின் செல்வன். மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த வரலாற்றுப் புனைவு கதையினை மொத்தம் இரண்டு பாகங்களாக இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இப்படம் இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் என அவரே மேடையில் கூறியுள்ளார்.  முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை  எட்டாம் தேதி சென்னையில் பிரமாண்ட விழாவில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  டீசரில் மன்னன் ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி வர்மன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பல்வேறு தரப்பினர், கூறிப்பிட்டு குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக அருள்மொழி வர்மன் என்பது தான் சரி என குறிப்பிட்டு வந்தனர். இதனால், படக்குழு இந்த பெயர் குழப்பத்திற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் விளக்கத்தினை வெளியிட்டுள்ளனர். இதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஜெயக்குமார், ராமச்சந்திரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசியுள்ளனர். 


இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் தொடர்பான பல காட்சிகளை இணைக்கும் பின்னணி குரலுக்கு நடிகர் கமல்ஹாசன் கொடுக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  படத்தின் மீது சினிமா ரசிகர்களைத் தாண்டி பொன்னியின் செல்வன் நாவலின் ரசிகர்களின்  பெரும் எதிர்பார்ப்பினை  பெற்றுள்ளது.