மணிரத்தினம் இயக்கத்தில், லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்.இதில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், த்ரிஷா, ஐஷ்வர்யாராய் பச்சன், 'ஜெயம்' ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஷ்வர்ய லெக்‌ஷ்மி உள்ளிட்ட  பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக 'ஜெயம்' ரவியும் , பெரிய பழுவேட்டையராக சரத்குமாரும், சின்னப் பழுவேட்டையராக பார்த்திபனும் , சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜும்,ஆழ்வார்க்கடியனாக நடிகர் ஜெயராமும் நடிக்கின்றனர். அதே போல நந்தினியாக ஐஷ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பூங்குழலியாக ஐஷ்வர்ய லெக்‌ஷ்மி நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மணிரத்னம் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேலுடன் இணைந்து எழுதியிருக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், கலை தோட்டா தரணி என திரைத்துரையின் முக்கியமானவர்கள் களமிறங்கியுள்ளனர்.இது படம் குறித்த கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





இந்நிலையில் படத்திற்கான பாடலை கபிலன் வைரமுத்து எழுதுகிறார் என நேற்று செய்திகள் வெளியானது. இதனை மறுத்துள்ள அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நான் பாடல் எழுதுவதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மை இல்லை” என தெரிவித்துள்ளார். முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இடம்பெறவில்லை என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான் “இது குறித்து மணிரத்தினம்தான் பதிலளிக்க வேண்டும் “ என தெரிவித்தார். 




பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்காக அமைக்கப்பட்ட செட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரல் ஆகின. இதனைத்தொடர்ந்து  படத்தில் ஆதித்த கரிகாலனாக  நடிக்கும் ‘விக்ரம்’ வாள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.






முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகிற 2022-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன்  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. படம் குறித்த சில  அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.