பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை (ஜூலை. 07) மாலை ஆறு மணிக்கு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த டீசர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.
முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இப்படம் குறித்த அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டீசர் குறித்த இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் கதைக்களமான தஞ்சாவூரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெட்ராஸ் டாக்கீஸ், கடந்த வாரம் ”வருகிறான் சோழன், ”சாகசங்கள் நிறைந்த வாரத்துக்கு தயாராகுங்கள்” எனும் கேப்ஷனுடன் படம் குறித்த அப்டேட்களை இந்த வாரம் முழுவதும் வழங்க உள்ளதாகத் தெரிவித்திருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்