ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கானது இணையத்தில் வெளியாவதை தடுக்க 13,000 இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
படத்தின் இணை தயாரிப்பாளரான ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஸ்டுடியோ தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் செப்டம்பர் 30 அன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பல அடையாளம் தெரியாத இணையதளங்கள் உள்பட திரைப்படம் தொடர்பான எந்த பதிப்புரிமையையும் மீறக்கூடாது என உயர்நீதிமன்றம் கட்டுபாடு விதித்துள்ளது. இணையதளங்கள் அல்லது எந்தவொரு தனிப்பட்ட நபரும் படத்தின் எந்தப் பகுதியையும் பொதுமக்கள் பார்வைக்கோ, நகல் அல்லது விநியோகத்திற்காகக் கிடைக்கும் வகையில் பதிவு செய்யவோ அல்லது வெளியிடவோக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு அதிக பணம் முதலீடு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது. படத்தின் மீது சட்டப்பூர்வ உரிமைகளைக் கொண்ட இணை தயாரிப்பாளராக இருப்பதால், அதன் பதிப்புரிமையை மீறும் அச்சுறுத்தல் உள்ளது என மனுவில் தெரிவித்துள்ளது.
அனைத்து தரப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்புவது தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் இடைக்கால உத்தரவை விதிப்பதற்கான நோக்கத்தை தோற்கடிக்கும் என்றும் நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்றம் 6 வாரங்களுக்கு இடைக்காலத் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’. இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் அதே பெயரில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவானது.
தமிழில் இந்த படத்தை தயாரித்த YNOT Studiosவுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அன்றைய தினம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.