’தில் சே’ பாடல் உருவானது எப்படி என்று மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் பகிர்ந்து இருக்கிறார்கள். 


ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ‘தில் சே’. தமிழில்  உயிரே என்ற பெயரில் வெளியான இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ‘தில் சே’ மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, இன்று வரை ஒரு கிளாசிக் பாடலாக இருக்கிறது. அந்தப்பாடல் உருவாக்கம் குறித்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பகிர்ந்து உள்ளனர்,


‘தில் சே’ பாடல் உருவாக்கம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது, “ மணிரத்னம் எனக்கு பாடல் பற்றி எதுவும் சொல்லவில்லை. என்னிடம் கதையை சொல்ல மாட்டேன் என்று கூறிய அவர், காதலின் ஏழு நிலைகளை இசையாக தருமாறு சொன்னார். அவர் என்னிடம் அவ்வளதான் சொன்னார்.  நானும் ஓகே என்றேன். அவ்வளவுதான் அந்த ஒட்டுமொத்த பாடலுக்கான இன்புட்.


அவர் என்னிடம் கதையை சொல்லாதது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைத்தது. இது உண்மையில் எங்கள் அனைவரையும் அடுத்தக்கட்டத்திற்கு உந்தி தள்ளியது. அதைத்தான் இப்போது சிறந்த ஒலிப்பதிவுகளில் ஒன்றாக மக்கள் உணர்கிறார்கள். இது ஒரு உத்வேக அனுபவம்.” என்றார். 


இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “  அது பாடலாசிரியராக கூட இருக்கலாம். நீங்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் போது, அதற்குள் அவர்கள் கட்டுப்பட்டு விடுவார்கள். அவர்களிடம் இதுதான் வேண்டும் என்று சொல்லாமல் சுருக்கமாக உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை சொல்லும் போது,பின்னர் அது உருவாகிவிடும்” என்று பேசினார். 


 







கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். 


இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  


இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். ட்ரெய்லர் மக்களுக்கு பிடித்துப்போன அதே வேகத்தில் பிரோமோஷனை ஆரம்பித்தது பொன்னியின் செல்வன் படக்குழு. 


சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழு, தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, டெல்லி என பறந்தது. அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே படப்பிடிப்பு சம்பந்தமான போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.