அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் வாசகர்களின் மனதில் ஆரோகணித்திருக்கும் நாவல்களில் ஒன்று பொன்னியின் செல்வன். கல்கியால் தொடர் கதையாக எழுதப்பட்டு, பலத்த வரவேற்பைப் பெற்ற இந்த நாவல் பின்பு, புத்தகமாக பல நூறு பதிப்புகளைக் கண்டது. இப்போதும் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்கப்படும் நாவல்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த நாவலைப் படமாக எம்ஜிஆர் காலத்தில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கைகூடாமல் போனது. மணிரத்னமே 3 முறை முயற்சித்து, தற்போது படமாக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான நிலையில், 9 மாதங்கள் கழித்து இரண்டாவது பாகம் தற்போது வெளியாகி உள்ளது.
5 நெடிய பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலின் கதை, கதாபாத்திரங்களின் இயல்புகளான, தைரியம், வீரம், காதல், துரோகம், ஏமாற்றம், சாதுர்யம் உள்ளிட்ட பல பண்பாட்டியல் கூறுகளை, ஒற்றைத் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட முடியாது. இந்த சவாலைத் தாண்டித்தான் மணிரத்னம் திரைப்படத்தைச் சாத்தியமாக்கி உள்ளார்.
எனினும் நாவலின் பல்வேறு சாராம்சங்கள், படத்தின் சுவாரசியம் கருதி, நீக்கப்பட்டிருப்பதையும் மாற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. அவை என்னென்ன என்று காணலாம்.
அருண்மொழி வர்மன் - ஆதித்த கரிகாலன் சந்திப்பு
நாவலில், சோழ தேசத்தின் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனும் அவனின் தம்பி அருண்மொழி வர்மனும் சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள். நந்தினியைக் காண்பதைத் தவிர்க்க காஞ்சிபுரத்திலேயே வசிக்கும் ஆதித்த கரிகாலன், கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வந்து, அங்கேயே மாண்டு போவான். ஈழத்துக்குச் செல்லும் அருண்மொழி வர்மன், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று, தஞ்சை திரும்புவான்.
ஆனால் திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் - ஆதித்த கரிகாலன் - குந்தவை சந்திப்பு, நாகப்பட்டினம் சூடாமணி புத்த விஹாரத்தில் நிகழ்கிறது. அங்கே வந்தியத்தேவன், குந்தவை உள்ளிட்டோர் கடம்பூர் செல்ல வேண்டாம் என்று கூறியும், ஆதித்த கரிகாலன் செவிமடுக்காமல் கடம்பூர் செல்கிறான்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?
வீரமும் வலிமையும் திறமையும் நிறைந்த ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பது நாவலில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். நந்தினியா, பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா, பெரிய பழுவேட்டரையரா? அல்லது வேறு யாரேனுமா என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டிருப்பார் கல்கி.
படத்தில் ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையிலான சந்திப்பும் நேசமும் கோபமும் அத்தனை கவித்துமாய்க் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் ஆதித்தனின் இறப்புக்குக் காரணம் என்ன என்பது தெளிவாய்ச் சொல்லப்பட்டுவிடுகிறது.
காணாமல் போன மணிமேகலை
பொன்னியின் செல்வன் நாவலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக இன்னொருவரை நேசிப்பார்கள், வெறுப்பார்கள். அதற்குப் பின்னால் தேசம், அரசியல், கண்கவர் அழகு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கும். ஆனால் எந்தவிதக் காரணமும் இல்லாமல் பிரதிபலனை எதிர்பார்க்காமல் வந்தியத் தேவனை விரும்புவள் மணிமேகலை. சம்புவரையரின் மகளான மணிமேகலை, ஒருதலைக் காதல் என்னும் சுழலில் சிக்கி, கடைசியில் புத்தி பேதலித்து, இறந்தே போவாள்.
படத்தின் முதல் பாகத்தில் மணிமேகலை கதாபாத்திரமே காட்டப்படாத நிலையில், 2ஆவது பாகத்தில் இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனனர். படத்தின் நீளத்தாலோ வேறு காரணங்களுக்காகவோ மணிமேகலை படத்தில் இல்லை. அதுபோல குடந்தை ஜோதிடரும் படத்தில் காட்டப்படவில்லை.
மாறிய மதுராந்தகத் தேவர் மனம்
நாவலில் அருண்மொழி வர்மனின் சித்தப்பா மதுராந்தகத் தேவர். குழந்தையாக இருக்கும்போதே ஆள்மாறாட்டம் நடந்திருக்கும் சூழலில், வீர பாண்டியனின் மகனே, சோழ அரண்மனையில் மதுராந்தகனாக மாறியிருப்பார். சேந்தன் அமுதனே உண்மையான மதுராந்தகனாக இருக்கும் சூழலில், அவருக்கு மணிமகுடம் சூட்டப்படும். பழிவாங்கும் என்ணத்தில் போலி மதுராந்தகத் தேவன், தப்பிச் செல்வார்.
படத்தில், ராஷ்டிரகூடர்களுடன் கூட்டுச் சேரும் மதுராந்தகச் சோழன், அந்த நாட்டு இளவரசியை மணந்து போரில்லாமல் சோழ தேசத்தைக் கைப்பற்றத் திட்டமிடுவார். பின்னர் போர் மூளும் சூழலில் மனம் மாறி, அருண்மொழி வர்மனின் ஆட்சியை ஏற்க ஆயத்தமாவார்.
நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு?
நாவலில் நந்தினியின் தந்தை யார் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்காது. சுந்தரச் சோழன், வீர பாண்டியன், கருத்திருமன் என பல கதாபாத்திரங்கள் நந்தினியின் அப்பாவாக இருக்கலாம் என்று வாசகர்கள் எண்ணும் வகையில், கதையின் போக்கு இருக்கும். வீர பாண்டியன் நந்தினியின் தந்தையா, கணவனா என்று கூடக் கேள்விகள் எழும்.
எனினும் படத்தில் நந்தினியின் தந்தை வீர பாண்டியன் என்ற வகையில் கதை தெளிவாய்ப் பயணிக்கிறது. அதற்கான காரணமும் பாண்டிய நாட்டு ஆபத்துதவி ரவிதாஸன் வாயிலாக விளக்கப்படுகிறது.
பார்த்திபேந்திர பல்லவனின் கோபம்
நாவலில் ஆதித்த கரிகாலனின் உயிர் நண்பனான பார்த்திபேந்திர பல்லவன், வந்தியத் தேவனின் மீது பொறாமையுடனே இருப்பார். குந்தவைக்கு வந்தியத் தேவனின் மீதிருக்கும் ஈர்ப்பும், பார்த்திபேந்திரனின் கோபத்தை அதிகரிக்கும். இதற்கிடையில் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு வந்தியத் தேவனே காரணம் என்று முடிவுகட்டுவார்.
படத்தில் இவை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் இறுதியில் பார்த்திபேந்திரன் ராஷ்டிரகூடர்களுடன் இணைந்து சோழ தேசத்துக்கு எதிராகப் போரிடுவார். இந்த சித்தரிப்பு எதுவும் கதையில் இல்லை.
ராஷ்டிரகூடர்கள் உடனான போர்
படத்தில் மதுராந்தகனுக்கு முடிசூட்டுவது என்பதைக் காரணமாகச் சொல்லி ராஷ்டிரகூடர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுப்பார்கள். மதுராந்தகத் தேவன் மனம் மாறி, திரும்பி வந்தபிறகும் பார்த்திபேந்திர பல்லவனும் ராஷ்டிரகூடர்களும் இன்னும் சில அரசர்களும் போரிடுகின்றனர். இவர்களை எதிர்த்து, அருண்மொழி வர்மன், வந்தியத் தேவன், மதுராந்தகன் ஆகியோர் எதிர்த்து வெல்கின்றனர். இந்த சித்தரிப்பு எதுவும் கதையில் இல்லை.
படத்தின் காட்சி சுவைக்காகப் போர்க் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பழுவேட்டரையர் மரணம்
நந்தினியின் மீதான ஆசையால் எதையும் விசாரிக்காமல் அவளைத் திருமணம் செய்துகொள்வார் பெரிய பழுவேட்டரையர். தம்பி சிறிய பழுவேட்டரையர் எச்சரித்து வந்தாலும், இறுதியில் கடம்பூர் மாளிகையில்தான் நந்தினி குறித்த உண்மைகளை அறிவார். ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குத் தானும் காரணம் என்று கத்தியால் குத்திக்கொண்டு உயிர் துறப்பார், மாரில் 64 விழுப்புண்களைத் தாங்கிய மாவீரர். எனினும் படத்தில் பழுவேட்டரையர் உயிருடனே இருப்பார்.
சேந்தன் அமுதன் - பூங்குழலி திருமணம்
நாவலில் படகோட்டிப் பெண்ணான பூங்குழலி, அரச வம்சத்தைச் சேர்ந்த அருண்மொழி வர்மனின் மீது காதல் கொண்டு திருமணம் செய்ய ஆசைப்படுவாள். அரச போகமும் அரண்மனை வாழ்வும் வேண்டுமெனக் கேட்பாள். எனினும் பிறகு மனம் மாறி, சேந்தன் அமுதனைத் திருமணம் செய்துகொள்வாள். பிறகு அவனே உண்மையான மதுராந்தகன் என்னும் உண்மை தெரியும். பூங்குழலிக்கு ஆசைப்பட்ட அரண்மனை வாழ்வும் வாய்க்கும்.
எனினும் படத்தில் சேந்தன் அமுதனை பூங்குழலி நிராகரிக்கிறாள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, படத்தின் உருவாக்கம், நேரக் கட்டுப்பாடு, ரசிகர்களை வசீகரிக்கும் எண்ணம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மாற்றங்கள் நடந்திருப்பதை உணர முடிகிறது.