முன்னதாக நடந்துமுடிந்த பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாகக் கலந்துகொள்ளாத நிலையில், நாளை விக்ரம் தொடர்பான ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை வழங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


திடீர் உடல்நலக்குறைவு


சென்ற ஜூலை 9ஆம் தேதி பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழு பங்கேற்று பிரம்மாண்டமாகக் கொண்டாடிய நிலையில், படத்தின் முக்கியக் கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் விழாவில் பங்கேற்கவில்லை.


 நடிகர் விக்ரம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் பரவி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. மேலும், விக்ரமுக்கு மாரடைப்பு எனவும் தகவல்கள் பரவின.


கோப்ரா விழாவில் பேச்சு


இந்நிலையில் நேற்று (ஜூலை.11) நடைபெற்ற கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விக்ரம், ”சின்ன டிஸ் கம்ஃபர்ட் இருந்தது, அதனால்தான் நான் மருத்துவமனைக்கு சென்றேன். ரசிகர்கள் ரொம்ப வருத்தப்பட்டங்க அதான் நான் நல்லா இருக்கேன் சொல்லத்தான் இங்க வந்தேன்” எனச் சொல்லி தனது ஏராளமான ரசிகர்களைத் தேற்றினார்.


நாளை வெளியாகும் அப்டேட்


பொன்னியின் செல்வன் பட விழாவில் விக்ரம் பங்கேற்காததற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துவரும் நிலையில், தற்போது விக்ரம் கதாபாத்திரம் குறித்த பிரத்யேக அப்டேட் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


”பட்டத்து இளவரசரை விழாவில் மிஸ் செய்தவர்களுக்கு சிறப்பு அப்டேட்” என்றும் இந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.


5 மொழிகளில்...


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படம்  வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.