'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்வதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் (செப்.06) நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த விழாவில் இந்திய சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்ள உள்ளதாக முன்னதாக அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் இது குறித்து பகிர்ந்துள்ள நிலையில், இதை விட இந்த விழா சிறப்புற முடியாது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட விழா ஒன்றில் நடிகர் ரஜினியும் நடிகர் கமலும் ஒன்றிணைவது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகளை கடந்த மாதங்களில் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.