கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு, மணிரத்தினம் இயக்கிய திரைப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது.  விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என, பெரும் நடிகர் பட்டாளமே அப்படத்தில் நடித்துள்ளது.

 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில், கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. பிரமாண்ட காட்சிகளுடன், மணிரத்தினத்தின் நேர்த்தியான திரைக்கதையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.  இதன் காரணமாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிய, உலக அளவில்  பொன்னியின் செல்வன் திரைப்படம்,  ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வசூலில் புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.





 

இந்நிலையில், முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள அலை கடல் எனும் பாடலின் வீடியோ நாளை கலை  11 மணிக்கு வெளியாகும் என  லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பூங்குழலி கதாபாத்திரம் அறிமுகமாகும் பாடல் இதுவென்பதால், லைகா நிறுவனத்தின் அறிவிப்பு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற தேவராளன் ஆட்டம் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.