பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசும் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. 


ஒட்டுமொத்த இந்திய திரையுலமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்  ‘பொன்னியின் செல்வன்’. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.


 


                                                                           


அதில் விக்ரம் பேசிய வசனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த வசனத்தை நடிகர் விக்ரம் டப்பிங்கில் பேசிய வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் நடிகர் விக்ரம் 5 மொழிகளில் அந்த வசனத்தை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்து இருக்கிறார்.


நெகிழ்ந்த மணிரத்னம்


முன்னதாக டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், “ கல்லூரி படிக்கும் போது இந்த நாவலை படித்தேன். முதலின் என் நன்றியை கல்கிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன். முதலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டியது.


ஆனால் அவர் ஏன் எடுக்கவில்லை இப்போது தான் புரிகிறது. எங்களுக்காக அதை விட்டு வைத்து விட்டு சென்றுள்ளார். பல பேர் பொன்னியின் செல்வன் படம் எடுக்க முயன்றனர்.. நானே 3 தடவை முயன்றுள்ளேன். அதனால் இதன் மதிப்பு எனக்கு தெரியும். கொரோனா சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க முழுக்க ஒரு அழுத்தத்தில் தான் எடுக்க முடிந்தது. நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னால் இந்தப்படத்தை எடுத்திருக்க முடியாது” என பேசினார்.