பொன்னியின் செல்வன் படத்திற்காக இசையமைப்பில் மிரட்டியிருக்கிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் படத்திற்கான இசை அப்படியே பார்வையாளர்களை 10 ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் சென்று அங்கு பல தோல் கருவி வாத்தியங்களையும் வாங்கி வந்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதற்காக இரண்டாண்டுகள் பழங்கால இசைக் கருவிகள் பற்றி ஆராய்ச்சியும் செய்துள்ளது ஏ.ஆர்.ரஹ்மானின் டீம். இப்படி ஆராய்ந்து வாங்கி வந்த இசைக்கருவிகளின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவற்றின் விவரம்: எக்காளம், கிடுகிட்டி, சுந்தரவளைவு, நாயனதாளம், தம்பாட்டம், பம்பை, துடி, தப்பு, உடுக்கை, உருமி, கொம்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீனை ஆகிய வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு முக்கியமான காட்சியை விவரிக்கும் மணிரத்னம் அதற்கு எந்த மாதிரியான பிரம்மாண்ட ஒலி வேண்டும் என்று கூறுகிறார். அதனை ட்ரம்ஸ் சிவமணி கேட்டுக் கொண்டிருக்கிறார். ரஹ்மான் வாங்கிவந்த பழங்கால வாத்தியங்களை ஆங்காங்கே நிற்கும் கலைஞர்கள் வாசிக்கின்றனர். அடேங்கப்பா என்று பார்க்கும்போதே நம் கண்கள் அகல விரியாமல் இல்லை.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டீஸர் வெளியீடு:
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் டீசரை லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இளையபிராட்டியை நந்தினி சந்திக்கும் காட்சி உள்ளது. ஆழ்வார்க்கடியான் ஒளிந்திருந்து பார்ப்பது நம் கண் முன் புத்தகம் கூறிய நம்பியை காட்டியுள்ளது. டீஸர் வெளியாகி சில நிமிடங்களிலேயே 10,000 பார்வைகளைக் கட்ந்தது. டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உள்ளது. போர்க்களமும், வீர வசனமும், சபதங்களும் நம்மை வரலாற்றுக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது.
இசையமைப்பில் உண்மையிலேயே மிரட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாகுபலியை மட்டுமே இதுவரை சிலாகித்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமா இன்னொரு வரலாற்று விருந்துக்கு தயாராகலாம் என்ற அழைப்பை டீஸர் கொடுத்துள்ளது. டீஸரே விருந்தாகிவிட்டதால் திரைப்படம் பிரம்மாண்ட விருந்து எனக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர் திரை ரசிகர்கள்.