மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (MCU) இன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் மிஸ்.மார்வெல் தொடர், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட நியூ ஜெர்சியில் வசிக்கும் 16 வயது சிறுமியின் வாழ்க்கையை மையமாக கொண்டது. இந்த டிஸ்னி+ நிகழ்ச்சி தெற்காசிய சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.


இந்நிகழ்ச்சியின் 5வது எபிசோட், பாகிஸ்தான் செல்லும் கமலாகான் தனது நானியுடன் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பற்றி பேசும் டயலாக், சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதைத்தொடர்ந்து பலர் அதைப்பாராட்டி வர சிலர் இதை விமர்சித்தும் வருகின்றனர்.


"எனது பாஸ்போர்ட் பாகிஸ்தானை சேர்ந்தது, ஆனால் எனது வேர்கள் இந்தியாவை சேர்ந்தது, இடையில் ஒரு எல்லை, இரத்தம் மற்றும் வலியால் கட்டப்பட்டுள்ளது. சில ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் கொண்டிருந்த யோசனையால் மக்கள், நாடுகளாக பிரிந்துவிட்டனர்" என்று, கமலாவிடம்  நானி கூறும் டயலாக் அது. 




பலர் இந்த கட்சியை பாராட்டி உணர்ச்சிவச பட, சிலர் அந்த காட்சி பாகிஸ்தானியர்களை தவறாக சித்தரிப்பதாக கருதுகிறார்கள்.


"கமலாவின் நானி இந்தியப் பிரிவினையை மிகச்சரியாக விவரித்தார். இது உலக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல. அந்த அனுபவத்தின் நீண்டகால பயங்கரமான நினைவுகள் இன்றுவரை மில்லியன் கணக்கான தெற்காசிய மக்களை பயமுறுத்துகின்றன" என ஒருவர் பதிவிட,






மற்றொருவர் "ஒரு தெற்காசியராக, 75 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தாத்தா பாட்டி அனுபவித்த இந்த பயங்கரத்தை பார்ப்பது கூட மிகவும் கடினமாக இருந்தது. மார்வெல் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியப் பிரிவினையை தத்ரூபமாக சித்தரித்து ஒரு பெரிய வேலை செய்து இருக்கிறது" என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். 


பலர் பாராட்டி வர... சீரிஸின் இந்த ஒரு காட்சி மட்டும் தான் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று, பாகிஸ்தானியர்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர். 


‛‛என்னை நம்புங்கள், எந்த பாகிஸ்தானியரும் அவனது/அவள் அடையாளத்தைப் பற்றி குழப்பமடையவில்லை. நாங்கள் மிகவும் தேசபக்தி உள்ளவர்கள் மற்றும் எங்கள் பாகிஸ்தானிய அடையாளத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். பிரிட்டிஷ்காரரின் தூண்டுதலில் நாங்கள் பிரிவினை கேட்கவில்லை; நாங்கள் எங்கள் தேவைக்காக தான் பிரிந்து வந்தோம். என, பதில் கருத்து பதிவிட, பனிப்போரானது ட்விட்டர். 






இந்நிகழ்ச்சி இந்தியா-பாகிஸ்தான் போராட்டங்கள் வெளிப்படுத்தும் முதல் MCU நிகழ்ச்சி ஆகும் . இத்தொடரில் வரும் பல கதாப்பாத்திரங்கள் இந்தியா-பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தொடரின் முன்னணி கதாபாத்திரமான கமலாகான் கதாபாத்திரத்தில் நடிகர் இமான் வெள்ளாணி நடித்துள்ளார் . அவர் தனது இந்த கதாபாத்திரம் பற்றி கூறுகையில், " இந்த கதாப்பாத்திரம் என்னை போலவே உள்ளது, எனது சமூகத்தை சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தை நான் எப்போதும் எதிர்பார்த்தேன், இதை மார்வெல் காமிக்ஸ் வெளியிட்ட போது ஒரு பாகிஸ்தானிய கனடிய குடியேறியவராக நான் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்" எனக்கூறினார்.