பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் நாள் சுமார் 25 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் 2 வசூல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (ஏப்.28) உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி மணிரத்னம் பலகட்ட முயற்சிகளுக்குப் பின் உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபாலா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ரஹ்மான், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சென்ற ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரிசையில் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.
இந்திய வசூல் நிலவரம்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்தியப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களைப் பகிரும் Sacnilk தளத்தின்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 25.45 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ் பதிப்பில் 18.97 கோடிகளும், இந்தி பதிப்பில் 1.7 கோடிகளும், மலையாள பதிப்பில் 1.35 கோடிகளும், தெலுங்கு பதிப்பில் 3.4 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 3200 திரைகளுக்கும் மேல் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதல் நாள் முடிவில், முதல் பாகத்தை விட 25 சதவீதம் குறைவான வசூலையே இந்த பாகம் எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இன்றும் நாளையும் வார விடுமுறை நாள்கள் என்பதால் வசூல் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலவையான விமர்சனங்கள்
சர்வதேச வசூல் நிலவரம் குறித்தும் இதுவரை தகவல்கள் வெளிவராத நிலையில், லைகா ப்ரொடக்ஷன் நிறுவனமும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை பகிரவில்லை. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மேலும் 25 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் காட்சி முடிவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பறந்த நிலையில், அதன் பின் கலவையான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. திரைக்கதைக்காக நாவலில் இல்லாத காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் வாசகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.