சரித்திர காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று கோலாகலமாக வெளியானது. படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமரர் கல்கியின் படைப்பான "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் அதே பெயரில் படமாக்கிய திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாகம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி , மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உலகளவில் நேற்று வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் கிட்டத்தட்ட 500 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு என மிக பெரிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கெட்டி மேளத்துடன் வெளியிடப்பட்டது :
இந்த சரித்திர நாவலை புத்தக வடிவில் படித்த அனைவருக்கும் அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அதை காட்சிப்படுத்திய அழகை காண திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. படத்தின் ரிலீஸ் ஆனது என்னவோ நேற்று தான் ஆனால் படத்திற்கான டிக்கெட் விற்பனை சில நாட்களுக்கு முன்னரே தொடங்கி அனைத்தும் விற்று தீர்ந்தது. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகள். நேற்றைய தினம் காலை 4.30 மணிக்கு முதல் காட்சி மேளதாளம் முழங்க திரையிடப்பட்டது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்டோர் படத்தை ரசிகர்களோடு ரசிகராக இருந்த படத்தை கண்டு களித்தனர். ரசிகர்களின் வரவேற்பை கண்கொண்டு பூரித்துப் போனார்கள் நம் சோழர்கள்.
முந்தைய சாதனையை முறித்தது:
அந்த வகையில் அமோகமான வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் முந்தைய வசூல்களை எல்லாம் முறியடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 26.6 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதிலும் சுமார் 25 கோடியை தாண்டியும் உலகளவில் 35 கோடியையும் தாண்டி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்.
விக்ரம் படத்தின் வசூலைத் தாண்டியது :
கடந்த ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படத்தின் முதல் நாள் வசூலை பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.