இதோ அதோ என்று...பல ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது. பெருங்கூட்டம் விரும்பிப்படித்த, படித்துக் கொண்டிருக்கிற ‛பொன்னியின் செல்வன்’ நாவல், திரைப்படமாக நேற்று முதல் திரையரங்களுக்கு வந்திருக்கிறது. எதிர்பார்த்தபடியே அனைத்து தியேட்டர்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ்.
கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக படையெடுத்து படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தயாரிப்பாளர் லைகா நிறுவனம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ரஹ்மான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட அனைவருமே தனித்தனியே பாராட்டை பெற்று வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கிய போதும் சரி, அது தொடர்பான முதல் அப்டேட் வந்த போதும் சரி, கொண்டாடித் தீர்த்தனர். குறிப்பாக, முதல் பாடலாக ‛பொன்னி நதி பார்க்கணுமே...’ பாடல் வெளியான போது, அந்த பாடல் போய் சேராத இடமே இல்லை எனலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் குரலும், இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகளும் பொன்னி நதியோடு பயணிக்கும் வந்தியத் தேவனோடு நம்மையும் அழைத்துச் சென்றது.
இதில் பொன்னி நதி பாடலில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. சுவாரஸ்யம் என்பதை விட, உண்மை இருக்கிறது எனலாம். ‛பொன்னி நதி பார்க்கணுமே... ஈஆரிஎசமாரி...’ என்று தான் பாடல் தொடங்கும், இதில் ஈஆரிஎசமாரி என்கிற வார்த்தையை நாம் எல்லாம், ஏதோ ஒரு ஹம்மிங் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது ஒரு தமிழ் வார்த்தை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
பொதுவாகவே ஏ.ஆர்.ரஹ்மான், ஹரீஸ் ஜெயராஜ் பாடல்களில் இது போன்ற வார்த்தைகள் இருக்கும். உதாரணத்திற்கு ‛ஓமஹசீயா...’ போன்ற பாடல்கள். பொன்னி நதி பாடலில் வரும் ஈஆரிஎசமாரி என்கிற வார்த்தையையும் நாமும் ‛ஓமஹசீயா...’ போல தான் கடந்து முனுமுனுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு அழகான, வீரமான அர்த்தம் இருக்கிறது.
ஈ- வில், அம்பு, ஈட்டி
ஆரி- பெரும் வீரன்
எச-இசை
மாரி-மழை
ஈஆரிஎசமாரி- வில் வீரனின் இசை மழை
என்று அர்த்தம். ‛பொன்னி நதி பார்க்கணுமே... வில் வீரனின் இசை மழை’ எப்படி இருக்கு பாருங்க பாடல்! வில் வீரன் வந்தியத்தேவனின் பாடல் தான், ‛பொன்னி நதி பார்க்கணுமே...’ பாடல். அவன் பொன்னி நதியையும், சோழ நாட்டையும் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய புகழும் பாடலில் வருகிறது. இது தான் தமிழுக்கான அழகு. ஆனால், இதை தெரியாமலேயே நாம், ஈஆரிஎசமாரி என்கிற வார்த்தையை இஷ்டத்திற்கு வாயில் வந்த வார்த்தையில் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் நம் தவறில்லை தான்; இதற்கு முன் வந்த பாடல்களும், தந்த பாடல்களும் அப்படி.