நடிகர் தனுஷ் நடித்துள்ள “கேப்டன் மில்லர்” படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி காணலாம். 


ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி திரையுலகில் முக்கிய இயக்குநராக உயர்ந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் கேப்டன் மில்லரை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன், விஜி சந்திரசேகர், ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 


வரலாற்று பாணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக சமூல வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 125 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங்கின் அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிந்ததாக படக்குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 6 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 






இதனால் கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து இந்த படத்தை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து #CaptainMiller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், நம்ம சிவா அண்ணா, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதர் ஜிவி பிரகாஷ், பிரியஞ்கா மோகன், சண்டை பயிறியாளர் திலீப், தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் கேப்டன் மில்லர் படம், “முதல் நாளில் ரூ.8.7 கோடியும், 2ஆம் நாளில் ரூ.7.45 கோடியும், 3 ஆம் நாளில் ரூ.7.76 கோடியும் வசூல் செய்துள்ளது. பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 3 நாளைக்கு வசூல் நிலவரம் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் மில்லர் படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.