நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாறுபட்ட தோற்றத்தில் சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு “எதற்கும் துணிந்தவன்” படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து கிட்டதட்ட அவரது படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகவுள்ளது. இதனால் கவலையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து வைக்க வருகை தருகிறது “கங்குவா”. இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் முதல்முறையாக இணைந்துள்ள சூர்யா இந்த படத்தில் 13 விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக திஷா பதானி அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்து 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கங்குவா படம் உருவாகியுள்ளது. இந்தாண்டு மிக பிரமாண்டமான செலவில் உருவாகியுள்ள கங்குவா படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் அப்டேட்
கடந்தாண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியானது. கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்று பொருள். தொடர்ந்து ஜூலை மாதம் 23 ஆம் தேதி சூர்யாவின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் மிரட்டும் லுக்கில், வித்தியாசமான கிராபிக்ஸ் என இப்படத்தின் வீடியோ ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. பின்னர் கையில் வாளுடன் போர் களத்தின் நடுவே சூர்யா குதிரையில் வருவது போல காட்சி கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கங்குவா ஷூட்டிங்கில் கேமரா சூர்யா மீது விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தடைபட்ட ஷூட்டிங்கின் அடுத்த அப்டேட் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. அதாவது சூர்யா தனது போர்ஷனை முடித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் தனது பதிவில், “"கடைசி நாள் படப்பிடிப்பு இன்று. படக்குழு முழுவதும் பாசிட்டிவாக இருந்தது. இது ஒன்றின் முடிவாக இருக்கலாம் ஆனால் பலவற்றின் தொடக்கம். இத்தனை அற்புதமான நினைவுகளை கொடுத்த இயக்குநர் சிவாவுக்கு எனது நன்றிகள். கங்குவா திரைப்படம் மிகவும் பிரம்மாண்டம் மற்றும் ஸ்பெஷல். இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க உங்களை போலவே ஆர்வமாக இருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கங்குவா படத்தின் இரண்டாவது போஸ்டர் ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.