மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இறந்தது எப்படி? 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது தளத்தில் வாணி ஜெயராம் வசித்து வருகிறார். அவரது வீட்டில் மலர்கொடி என்ற பணிப்பெண் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல 10.45 மணிக்கு மலர்கொடி வேலைக்காக வாணி ஜெயராம் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு காலிங் பெல் அடிக்கவும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. கிட்டதட்ட 5 முறை அடித்தும் கதவு திறக்கப்படாததால் வாணியின் போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் அவர் அழைப்பையும் எடுக்கவில்லை. உடனடியாக தன் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அவரும் வாணி ஜெயராம் எண்ணுக்கு போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் போன் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. 


இதனையடுத்து கீழ்தளத்தில் வசிப்பவர்களிடம் மலர்கொடி விவரத்தை சொல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வாணியின் கணவர் ஜெயராம் சில ஆண்டுகள் முன் இறந்து விட்டதால் அவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தார். வாணியின் தங்கை அடையாறில் வசித்து வருகிறார். அவருக்கும் போன் செய்து தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வாணியின் சகோதரி வந்தவுடன் அவர் முன்னிலையில் போலீசார் கதவை உடைத்து பார்த்ததாக சொல்லப்படுகிறது. அப்போது படுக்கறையில் நெற்றியில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் பின்னரே என்ன நடந்தது என்பது முழுவதுமாக தெரியும் என தெரிவித்துள்ளனர்.