தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. விஜய் தனது ஆட்சியில் ஊழல், லஞ்சம்  ஆகியவற்றை அறவே அழிக்க வேண்டும் என்பதையே தனது கொள்கை என்று வெளிப்படையாக அறிவித்து வருகிறார். 

Continues below advertisement

முன்னாள் தவெக நிர்வாகி கைது:

இந்த சூழலில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன் தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது பலரும் இது கண்துடைப்பு என்றே கருதினர். 

ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் தவெக நிர்வாகியாக இருந்த வீராச்சாமியை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமின்றி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தவெக-வின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Continues below advertisement

அச்சம்:

ஏனென்றால், தவெக-வின் கீழ்மட்டத்தில் இருந்த பலரும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெரியளவில் வசூல் வேட்டை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், முன்னாள் தவெக நிர்வாகி வீராச்சாமியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தாங்கள் வசூல் வேட்டை நடத்தினால் தங்களுக்கும் சிறை கம்பி எண்ணும் நிலை உண்டாகும் என்று ஆடிப்போகியுள்ளனர்.

கீழ்மட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் இதேபோன்ற நிலைதான் என்பதில் விஜய் திட்டவட்டமாக உள்ளார். ஜெயலலிதா பாணியில் விஜய் நிர்வாக மற்றும் கட்சி ரீதியான முடிவு எடுப்பதில் திட்டவட்டமாக உள்ளார். ஏற்கனவே தன்னிடம் சிபாரிசு போன்ற விவகாரங்களுக்கு தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் தன்னை அணுகவே கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

எச்சரிக்கை மணி:

விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கே கருணை காட்டாமல் இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக இருப்பதால், மற்ற கட்சியின் நிர்வாகிகளும் சற்று அச்சத்திலே உள்ளனர். தனது சொந்த கட்சியைச் சேர்ந்தவரையே சிறைக்கு அனுப்பியிருப்பதால், மற்ற கட்சியினருக்கும் லஞ்சம், ஊழல் போன்ற விவகாரங்களில் சிக்கினால் அதே நிலைதான் என்று அஞ்சியுள்ளனர். வீராச்சாமியின் கைது மற்ற தவெக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அடிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் மட்டுமின்றி அமைச்சர்களும் விஜய்யின் இந்த நடவடிக்கையால் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர்களின் செயல்பாடுகளை உளவுத்துறை மூலமாக தொடர்ந்து கண்காணித்து வரும் சூழலில், சிலரின் செயல்பாடுகளில் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த 3 மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.