தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஒரு கிராமப் பகுதியை சேர்ந்த பி.காம். பட்டதாரிக்கு லண்டனில் ஸ்டோர் கீப்பர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5.28 லட்சம் பணத்தை ஆன்லைனில் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜே.குமரேசன் (41) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.காம் பட்டதாரி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி குமரேசனின் டெலிகிராம் செயலிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அடையாளம் தெரியாத மோசடி நபர் ஒருவர், லண்டனில் உள்ள 'ஒரு நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பர்' பணிக்கு ஆட்கள் சேர்க்கின்றனர். தங்களுக்கு விருப்பம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேர்காணல், ஆவணக் கட்டணம், கமிஷன், விசா, அழைப்புக் கடிதக் கட்டணம், மருத்துவக் காப்பீடு மற்றும் குடியேற்றக் கட்டணம் (Immigration fees) ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ. 5,28,807/- தொகையை 6 தவணைகளாக ஆன்லைன் மூலம் அந்த மர்மநபர் கூறிய வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்தி உள்ளார்.
பின்னர் வேலை விஷயமாக அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள குமரேசன் முயற்சிகள் செய்துள்ளார். ஆனால் அந்த மோசடி நபரின் செல்போன் எண் சுவிட் ஆப் என்றே வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமரேசன் இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குமரேசன் செலுத்திய வங்கிக்கணக்குள் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள வங்கிகளின் கணக்குகள் என்று தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்ொண்டுள்ளனர்
மாணவிகளிடம் தகராறு... தொழிலாளி கைது
தஞ்சாவூரில் கல்லூரி மாணவிகளை வம்பிழுத்து தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை கீழ வண்டிக்கார தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் நவீன் குமார் (47) இவர் லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நவீன் குமார் குடிபோதையில் கடந்த 10ம் தேதி காலை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி விடுதி முன்பு நின்று கொண்டு மாணவிகளை வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து கல்லூரி விடுதி வார்டன் லிங்கேஸ்வரி (51) தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் கடந்த 16ம் தேதி வழக்குப்பதிவு செய்து மாணவிகளிடம் தகராறு செய்த நவீன் குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
