பாபா படம் வெளியான சமயத்தில் ரஜினிக்கும், பாமகவுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து மோதல் வெடித்தது. 2002 ஆம் ஆண்டு நடந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அமைதி காத்த ரஜினி, 2004 ஆம் ஆண்டு தனது பதிலடியை கொடுத்தார். இது இன்றளவும் அரசியல் களத்தில் யாராலும் மறக்க முடியாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 


என்ன நடந்தது? 


2002 ஆம் ஆண்டில் இதே நாளில் (ஆகஸ்ட் 15) பாபா படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. பாபா படம் வெளியான சில நாட்களுக்கு முன், கர்நாடகாவில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி, வீரப்பனை கொலை செய்ய வேண்டும் என பேச, பாமக நிறுவனர்  ராமதாஸ் கொதித்தெழுந்தார். வெளிப்படையாக அவரை விமர்சித்தார்.


அந்நேரம் பாபா படம் வெளியாகவிருந்த நிலையில், பாமகவினர், வன்னியர்கள் பாபா படம் பார்க்கக்கூடாது என தெரிவித்தார். மிகப்பெரிய பிரச்சினை வெடித்தது. பாபா பட பெட்டி, தியேட்டர் மேலாளர் கடத்தப்பட்டனர். இப்படி பல கலவரங்கள் 2002 ஆம் ஆண்டு வெடித்தது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அமைதி காத்த ரஜினி, 2004 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது பதிலடி கொடுத்தார். 


எதிர்ப்பு காட்டிய ரஜினி 


பாபா பிரச்சினை, நெய்வேலியில் நடைபெற்ற போராட்டம் பற்றி  தரக்குறைவாகப் பேசிய ராமதாஸூக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் தனது ரசிகர்களை எதிர்ப்பு தெரிவிக்க செய்தார். அதன்படியே ரசிகர்களும் செய்தனர். இப்படியான நிலையில் ரஜினி, ராமதாஸை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 


ரஜினி வெளியிட்ட அறிக்கை 


அதில், “டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? .அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாகப் பேசியிருக்கிறேனா?.  பாபா படத்தில் சிகரெட், மது தொடர்பான கட்சிகள் இளைஞர்களைக் கெடுத்து விடும் என சொல்லி படம் ரிலீஸான நாள் அன்று பல பிரச்சினைகளை நிகழ்த்தி தியேட்டர் நிர்வாகம், மேனேஜர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் வீடு, விநியோகர்கள் என அனைவருக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. 


வன்னிய சங்க சகோதரர்கள்  என்னுடைய ரசிகர்களாக உள்ளனர். ரசிகர் மன்றத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.  ராமதாஸ் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர், படித்தவர். பெரும் கட்சியின் தலைவரான அவர், தொலைபேசியிலாவது இந்த மாதிரியான காட்சிகளை படத்தில் வைக்க வேண்டாம் என சொல்லியிருந்தால் நான் வைக்காமல் இருப்பது குறித்து பரிசீலித்து இருப்பேன். இல்லையென்றால் இதுபோன்ற காட்சிகளை அடுத்தபடத்தில் தவிர்த்திருப்பேன்.
 
ஒரு தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதை விட்டுவிட்டு படம் வெளியான பிறகு இப்படி நாச வேலைகளில் ஈடுபடுவது சரிதானா?, என்னையும் என் ரசிகர்களையும் விமர்சித்ததால், பாதிக்கப்பட்ட ரசிகர்களின் உணர்வுகளை மதித்து பாமக போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும்  எதிர்ப்பைத் தெரிவிக்கச் சொன்னேன். அரசியலில் எனக்கு ஊழல், வன்முறை ஆகிய விஷயங்கள் பிடிக்காது. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். இந்த விவகாரத்தில் நான் என்னுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்கவில்லை.  இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால் நல்லவர்கள் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர். 


ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று நீங்கள் சொன்னால் அதை ஆயிரம் முறை செய்வேன். ரசிகர்கள் உங்கள் பலம் என்னவென்று ராமதாஸூக்கு புரிய வைத்து விட்டிர்கள்.  இனி ஓட்டுப் போடுவதில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.இதையும் மீறி பாமக ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம். 


உங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக மதுரையில் என் ரசிகர்களை தாக்கினார்கள். நாளைக்கு நீங்க எங்கு சென்றாலும் என் ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டுவார்கள்.என்ன  செய்ய முடியும். வேண்டாம் இந்த செயல்கள்” என காட்டமாக தெரிவித்திருந்த ரஜினி, அதே தேர்தலில் நதிநீர் பிரச்சினையை சுட்டிக்காட்டி வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.