காற்றில் ஒலிக்கும் குரல் மூலம் இதயத்திற்குள் நேரடியாக ஊடுருவி அந்த பாடலின் ஆழத்தை அதே உணர்வுடன் மனதிற்குள் கடத்தி செல்லக்கூடிய வித்தகர்களில் ஒருவர் பின்னணி பாடகர் ஹரிஹரன். ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அன்று 'தமிழா தமிழா... ' என கேட்ட அதே குரல் இன்றும் அதே ஃப்ரெஷ்னஸ் உடன் ஒலிப்பது அவருக்கே உரித்தான தனி சிறப்பு. இந்த இசையரசனின் பிறந்தநாள் இன்று.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ள ஹரிஹரன் கசல் எனும் இந்துஸ்தானி பாடல்கள் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர். 90ஸ் ஹிட்ஸ்களின் சித் ஸ்ரீராம் என்றால் அது ஹரிஹரன் மட்டுமே. அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ள ஹரிஹரன் நடிகர் அஜித், விஜயின் பெரும்பாலான பாடல்களை இவர்தான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு எப்படி டி.எம்.எஸ் குரல் எப்படி பொருந்தி இருக்குமோ அதை போல அஜித் விஜய்க்கு ஹரிஹரன் பாடுகையில் அவர்களே பாடுவது போல அத்தனை பொருத்தமாக இருக்கும். அவரின் குட்டி குட்டி சந்ததி ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஆலாபனைகள் என ஹரிஹரனின் அனைத்து நுணுக்கங்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். தமிழில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ஹரிஹரன் இரண்டு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும் பத்மஸ்ரீ விருது, IIFA குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
கேரளாவின் இசை குடும்பத்தை சேர்ந்த ஹரிஹரன் பின்னர் மும்பைக்கு சென்று தென்னிந்திய இசை பள்ளியை நடத்தி பல புகழ்பெற்ற பாடகர்களை உருவாக்கியுள்ளார். ஹிந்துஸ்தானி மற்றும் கஜல் பாடல்களை பாடுவதில் தேர்ந்தவர். 1996ம் ஆண்டு கலோனியல் கசினிஸ் என்று பெயரில் டூ - பீஸ் இசைக்குழுவை தொடங்கினார். அந்த குழுவின் உறுப்பினர்களான லெஸ்லி லூயிஸ் மற்றும் ஹரிஹரன் இருவரும் இணைந்து ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டனர். அவர்களின் முதல் ஆல்பமான கிருஷ்ணா நீ வேதமே ஆல்பம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.
இந்தியாவின் பிளான்டினும் விற்பனையையும் தாண்டி அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி நடை போட்டது. எம்டிவி ஏசியா வியூவர்ஸ், யுஎஸ் பில்போர்டு வியூவர்ஸ் சாய்ஸ், வீடியோகான் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. எம்டிவி அன்பிளக்டு இடம்பெற்ற முதல் இந்தியன் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆத்மா, ஒன்ஸ் மோர் உள்ளிட்ட பல இசை ஆல்பங்களை வெளியிட்டனர்.
பின்னணி பாடகர், கஜல் ஹிந்துஸ்தானி பாடகர் என்பதையும் கடந்து இசைமைப்பாளராக 2009ம் ஆண்டு வெளியான மோதி விளையாடு மற்றும் 2010ம் ஆண்டு வெளியான சிக்கு புக்கு என்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி குஷ்பு உடன் 'பவர் ஆப் வுமன்' படத்திலும் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலங்களால் அழிக்க முடியாத ஒரு தனித்துவமான பாடகராக விளங்கும் ஹரிஹரன் குரல் பல ஆண்டு காலம் மேலோங்கி ஒலிக்க வாழ்த்துக்கள்!