தென்னிந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் எஸ். ஜானகியின் பிறந்தநாள் இன்று. தன்னுடைய தனித்துவமான இனிய குரலால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்தவர். 60 ஆண்டுகள் 17 மொழிகளில் 48000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி சாதனை படைத்த எஸ். ஜனனி பற்றி பலரும் அறியாத சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த ஜானகிக்கு படிப்பில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. இருப்பினும் சிறு வயது முதல் இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. அதை கவனித்த ஜானகியின் தந்தை அவரை ஒரு நாதஸ்வர வித்வானிடம் சங்கீதம் கற்றுக் கொள்வதற்காக சேர்த்துள்ளார். ஜானகியின் அபார இசை திறமையை பார்த்த குரு ஏழே மாதத்தில் நீயே ஒரு சங்கீதம் உனக்கு சங்கீதம் கற்று கொடுக்க தேவையில்லை என அனுப்பி வைத்து விட்டாராம்.
அகில இந்திய வானொலி நடத்திய பாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்ற ஜானகி பின்னர் குடும்பத்துடன் சென்னையில் குறியேறி ஏ.வி.எம் ஸ்டுடியோஸில் ஒப்பந்த அடிப்படையில் கோரஸ் பாடுபவராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
'விதியின் விளையாட்டு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பெண்ணாசை பாழானது ஏனோ...' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். ஒரே ஆண்டில் ஆறு மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தினார்.
தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா கட்டிய மாபெரும் இசை கோட்டைக்கு மிக முக்கியமான பங்காளர் எஸ். ஜானகி என்றால் அது மிகையல்ல. சிங்கார வேலனே தேவா, புத்தம் புது காலை, சின்ன தாய் அவள், காற்றில் எந்தன் கீதம், ஊரு சனம் தூங்கிருச்சு என அவர்கள் இருவரின் காம்போவில் வெளியான ஏராளமான படங்கள் இன்றும் எவர்க்ரீன் ரகம்.
80ஸ் காலகட்டத்தில் புகழின் உச்சியில் கொண்டாடப்பட்ட எஸ். ஜனனி ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை ரெக்கார்ட் செய்துள்ளார் என்பது ஆச்சரியமான தகவல். இந்தி மொழியில் அதிக அளவிலான திரையிசை பாடல்களை பாடிய முதல் தென்னிந்திய பாடகி என்ற பெருமைக்குரியவர்.
ஆஸ்துமா பிரச்சினை இருந்தாலும் அதை எதையுமே பாடும் போது வெளிக்காட்டாதவர். எந்த விதமுக பாவனையோ அல்லது அசைவுகளோ இன்றி மிகவும் இனிமையாக பாட கூடியவர். அவர் பாடும் போது உதடுகள் மட்டுமே அசையும் தவிர கைகளை கூட அசைக்காதவர்.குழந்தையின் குரல் முதல் கிழவியின் குரல் வரை பல குரல்களில் பாடி ஆச்சர்யப்படுத்தியவர்.
எத்தனை பெரிய பாடகியாக இருந்த போதிலும் அலட்டிக்கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படுவார். எஸ். ஜானகி தன்னுடைய இனிமையாக குரல் வளத்தை பாதுகாக்க பெரிய அளவில் பயிற்சி எதுவும் இதுவரையில் எடுத்து கொண்டதே கிடையாது. குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் இது இரண்டை மற்றும் தவிர்த்துவிடுவாராம்.
எஸ். ஜானகி பாடுவதில் மட்டும் சகலகலா வல்லியாக இல்லாமல் சிறப்பாக நடனமும் ஆடக் கூடியவர்.
புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் மத்திய அரசு ஜானகிக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்காமல் காலம் கடந்து 2013ம் ஆண்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை மறுத்துவிட்டார். 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள், கலைமாமணி விருது என ஏராளமான விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்ட எஸ். ஜானகியின் குரல் காலங்களை கடந்தும் வெல்லும். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!