இன்றைய கூகுள் முகப்பு பக்கத்தின் டூடுல் மலையாள சினிமாவில் முதல் பெண் கதாநாயகியான பி.கே.ரோஸி-யை கவுரவிக்கிறது.
மலையாளத்தின் முதல் நடிகை
1903 ஆம் ஆண்டு இதே நாளில், பி.கே.ரோஸி, கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிறந்தார். பிறந்தபோது ராஜம்மா என்று பெயர் சூட்டப்பட்ட அவரது நடிப்பு ஆர்வம் இளம் வயதிலேயே தொடங்கியது. சமூகத்தின் பல பிரிவுகளில், குறிப்பாகப் பெண்களுக்கு, கலை நிகழ்ச்சிகள் ஊக்கமளிக்காத காலகட்டத்தில், ரோஸி மலையாளத் திரைப்படமான விகதகுமாரன் (தி லாஸ்ட் சைல்ட்) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் பெண்ணாக அந்த தடைகளை உடைத்தார். இன்றும் கூட, அவரது கதை பலருக்கு ஊக்கமாகவும் உத்வேகமாகவும் செயல்படுகிறது.
கூகுள் டூடுலில் கவுரவிப்பு
இத்தகைய புரட்சிகரமான விஷயத்தை இந்தியாவில் செய்த ஒருவரை கூகுள் கவுரவித்துள்ளது. வழக்கமாக உலகின் பல்வேறு மூலைகளில் பெரிதும் வெளி உலகிற்கு அறியப்படாத சாதனையாளர்களை தனது முகப்பு பக்கத்தில் கூகுள் லோகோ இருக்கும் இடத்தில் டூடூல் ஆர்ட் வெளியிட்டு கவுரவிப்பது வழக்கம். அந்த சாதனையாளர் அந்தந்த பகுதிகளில் ஓரளவுக்கு அறியப்பட்டவாராக இருந்தாலும், உலகெங்கும் கிடைக்கும் அங்கீகாரமாக இது இருக்கும். அந்த வகையில் மலையாளத்தின் முதல் பெண் நடிகரான இவருக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது கூகுள்.
படத்தினால் எழுந்த சர்ச்சை
பி.கே. ரோஸி மலையாளத் திரைப்படம் வெளியானபோதும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அதைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. 1928 ஆம் ஆண்டு வெளியான விகதகுமாரன் (தி லாஸ்ட் சைல்ட்) என்ற மௌன மலையாளத் திரைப்படத்தின் கதாநாயகியான பிகே ரோஸி, மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி மட்டுமல்ல, இந்திய சினிமாவின் முதல் தலித் நடிகையும் ஆவர். இவர் இந்த படத்தில் சரோஜினி என்ற நாயர் சமூக பெண்ணாக நடித்திருந்தார். அதுவே பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்தது.
ஒரே ஒரு படத்தோடு ஒதுங்கிய ரோஸி
படம் வெளியானபோது, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலித் பெண் ஒருவர் தங்களை முன்னிலைப்படுத்தி நடிப்பதைக் கண்டு ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது வீடு உயர் சாதியினரால் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உயிருக்குப் பயந்து, தமிழகம் நோக்கிச் சென்ற லாரியில் ஏறி தப்பித்து சென்ற ரோஸி, லாரி டிரைவரான கேசவன் பிள்ளையை திருமணம் செய்து கொண்டு, ‘ராஜம்மாள்’ என்ற பெயரிலேயே வாழ்ந்து வந்துள்ளார். அதற்கு பின் அவர் நடிக்கவும் இல்லை, நடித்ததற்கான புகழையும் அனுபவிக்கவில்லை. முற்றிலுமாக அந்த நடிப்பு வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார். அவருக்கான ஒரே அங்கீகாரமாக மலையாள சினிமாவில் பெண் நடிகர்கள் சங்கம் பிகே ரோஸி பிலிம் சொசைட்டி என்று பெயரிட்டது.