போக்கிமான் ரசிகர்களின் மூளையில் பிக்காச்சூவின் கதாபாத்திரத்திற்கு என என்றும் ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று ஸ்டாஃபோர் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
போக்கிமான்
90களில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் கார்ட்டூன்களுக்கு என மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கார்ட்டூன் நெட்வர்க், போகோ, ஜெட்டக்ஸ், ஹங்காமா என பல்வேறு சானல்கள் அவர்களின் மனம் கவர்ந்த கார்ட்டூன்களை ஒளிபரப்பி வந்தன. ரிச்சி ரிச், டிராகன் பால் ஜீ, போக்கிமான் என வெவ்வேறு உலகங்களில் 90ஸ் கிட்ஸ் தங்களை மறந்து திளைத்தார்கள்.
அப்படி எக்கச்சக்கமான குழந்தைகளைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சிதான் போக்கிமான். ஜப்பானிய அனிம் வகையைச் சேர்ந்த இந்த கார்ட்டூன் நிகழ்ச்சி மிக சுவாரஸ்யமான கற்பனை உருவாக்கங்களில் ஒன்று என்றே சொல்லலாம். நிஜ உலகத்தில் மிருகங்கள் இருப்பது போல் போக்கிமான் உலகத்தில் போக்கிமான்கள் இருக்கும். இவை மனிதர்களோடு சேர்ந்தும் தனியாகவும் வாழ்ந்து வரும். ஒரு போக்கிமான் ட்ரெய்னர் ஆக வேண்டும் என்று நினைக்கும் ஆஷ் மற்றும் அவனது நண்பர்கள் மேற்கொள்ளும் பயணமே இந்த தொடர்.
பிக்காச்சூ
ஆஷ் என்று சொன்னால் அவனது தோளில் எப்போதும் அமர்ந்திருக்கும் பிக்காச்சூ நினைவுக்கு வராமல் இருக்காது. ஆஷ் மற்றும் பிக்காச்சூ முதல் முறையாக சந்தித்துக் கொள்வது, பிக்காச்சூ யாருக்கும் அடங்காமல் திமிர் பிடித்ததாக இருப்பது, பின் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறுவது என நட்பின் சிறந்த உதாரணங்களாக இந்த இருவரின் கதாபாத்திரம் அமைப்பு இருக்கும்.
தனது பெயரைப் போலவே பிக்காச்சூ எது பேச வேண்டுமானாலும் பயன்படுத்தும் ஒரே வார்த்தை ‘பிக்காச்சூ’ தான். கொளுகொளுவென்ற கன்னம், எளிதில் கோபப்படக் கூடிய சுபாவம், மின்சாரம் பாய்ச்சும் தனித்துவமான சக்தி என பிக்காச்சூ அனைவரை ஈர்த்தது.
குழந்தைகளில் ஸ்கூல் பேக்கில், பென்சில் பாக்ஸில், தண்ணீர் பாட்டிலில், சட்டையில், டீ, பூஸ்ட் குடிக்கும் கப் முதற்கொண்டு போக்கிமான் இருந்தே ஆக வேண்டும் என்கிற சிரமத்தைப்ப் பற்றி பெற்றோர்களை கேட்டுப் பார்த்தால் தெரியும். போக்கிமான் நிகழ்ச்சி இன்று வரை தொடர்ச்சியாக ஒளிபரப்பப் பட்டு வருகிறது. இன்றையத் தலைமுறை குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள்.
கடந்த 2016ஆம் ஆண்டு போக்கிமான் என்கிற ஒரு மொபைல் கேம் வெளியாகி பெரியளவில் வைரலானது. இந்த கேம் போக்கிமான் உலகத்தில் நாம் இருப்பது போலவே நம்மை உணரச் செய்தது. ஒவ்வொரு நபரும் மொபைல் ஃபோனைப் பார்த்துக் கொண்டே புதர்களுக்குள் சென்று போக்கிமான் பிடிக்கச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளஙகளில் வைரலாகின. ஒரு சிலர் இப்படி விபத்திற்குள்ளாகியதாக கூட தகவல்கள் வெளியாகின. 2019ஆம் ஆண்டு போக்கிமான் வைத்து திரைப்படம் ஒன்றும் வெளியாகியது. ஆனால் இந்தப் படம் கார்ட்டூனைப் போல் ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை.
ஸ்டான்ஃபோர்ட் வெளியிட்ட தகவல்
இந்நிலையில், 90ஸ் கிட்ஸ்களின் மனதில் போக்கிமான் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம் ஆச்சரியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 1995ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை தீவிர போக்கிமான் ரசிகர்களாக இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், போக்கிமான் ரசிகர்களின் மூளையில் பிக்காச்சூ கதாபாத்திரத்துக்கு எப்போதும் ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களிடம் பிக்காச்சூ படங்களை காட்டியபோது அவர்களின் மூளையில் குறிப்பிட்ட பகுதில் அசைவு கண்டறியப்பட்டுள்ளது என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துள்ளது.