சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் சரி பச்சோந்தி வேஷம் போட்டால் மக்கள் ஒதுங்கிக் கொள்வார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.


வடக்குபட்டி ராமசாமி


பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கும் நிலையில் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் பிப்ரவரி 2 ஆம்  தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெரியாரை விமர்சிக்கவில்லை


சமீபத்தில் வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்தின் டீசரில் தந்தை பெரியாரை விமர்சிக்கும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறி சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சில நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் சந்தானம் விளக்கமளித்திருந்தார். “ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி மற்றும் தான் இருவரும் தீவிர கவுண்டமனி ரசிகர்கள் என்றும், அதனான் தான் இந்தப் படத்திற்கு அவரது ஒரு கதாப்பாத்திரத்தின் பெயரையே டைட்டிலாக வைத்ததாக அவர் கூறினார். ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது செய்து ரசிகர்களை சிரிக்க வைக்கத்தான் தான் முயற்சி செய்து வருவதாகவும் இதில் யாருடைய மனதையும் புன்படுத்தும் எண்ணத்தில் செய்யவில்லை என்று சந்தானம் தெரிவித்திருந்தார்.’ 


எல்லாருக்குமான நடிகராக இருக்க வேண்டும்


இதனைத் தொடர்ந்து சந்தானம் பேசியது குறித்து தனது விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.






தனது பதிவில் அவர் “ ப்ரமோஷனுக்காக எதையும் செய்வது ப்ரமோஷன் ஆகாது. ரெட் ஜெயண்ட் உங்கள் படத்தில் இருந்து பின் வாங்கியதே அந்த ப்ரமோஷனால்தான். எல்லாரும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஆனால் உதயநிதியின் நண்பன், பாமக ஆதரவாளன், சங்கி என மூன்று பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் கோடம்பாக்கத்தில் நீங்கள் ஒருவர்தான். அனைவருக்குமான காமடியான இருக்கும் வரைதான் இங்கே மதிப்பு.


சாதி, மதம், ஆளுங்கட்சி என கலர் கலராக பச்சோந்தி வேடம் போட்டால்.. மக்கள் ஒதுக்கி விடுவார்கள். அது சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார். சந்தானத்தை விமர்சிக்கும் இந்த பதிவில் அவர் நடிகர் ரஜினிகாந்தையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது ரஜினி ரசிகர்களை ஆவேசப்படுத்தியுள்ளது.