"கிரிக்கெட் என்றால் அன்றும் இன்றும் என்றும் சச்சின் தான்" என்று கூறும் அளவிற்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவரது ரசிகர்கள் அவரை கடவுள் போல வழிபட்டு வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுள் எனவும் அவர் அழைக்கப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும், அவரது சாதனைகள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன.‌ அதேபோல் கிரிக்கெட்டில் சச்சின் என்றால் இசையில் ஏ.ஆர். ரகுமான். உலக அளவில் இந்திய மண்ணை பெருமைப்படுத்தியவர். ஆஸ்கர் மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தன்னடக்கமாய் பேசியவர். உலகளவில் இவரது இசை தனித்து விளங்குகிறது. 






இரு பிரபலங்களும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். அவர்களின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணைய முழுவதும் வைரல் ஆகி வருகிறது. ஏ.ஆர் ரகுமானுக்கும் சச்சினுக்கும் உடனான நட்பு பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து வருகிறது. சச்சின் ஒரு முறை கிரிக்கெட் பேட் ஒன்றை ஏ.ஆர்.ரகுமானுக்கு பரிசளித்தார். சச்சின் டெண்டுல்கரின் பயோக்ராபி திரைப்படமான 'சச்சின்- எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.






சமீபத்தில் மும்பையில் உள்ள எம்சிஏ பந்திரா கிளப்பில் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.  
அந்த புகைப்படத்தில் ரகுமான் தோள் மீது சச்சின் கை போட்டு அமர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து ''ஹாங்கிங் அவுட் வித் மாஸ்டர் பிளாஸ்டர்'' என ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் இணையம் முழுவதும் தீயாய்  பரவி வருகிறது. சச்சின் ரசிகர்களும் ரகுமான் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர். 


இதற்கு முன் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் ஆட்டத்தின் ஆக்ஷனில் சச்சின் கலந்து கொண்டுள்ளார். அதேசமயம் பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் ரஹ்மான் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.