நடிகர் விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


பிச்சைக்காரன்:


சென்ற 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பெரிதாக கவனமீர்த்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிப்பு தாண்டி இந்த படத்தை நடிகர் விஜய்  தயாரித்திருந்தார். அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


மேலும் இந்தப் படம் தெலுங்கில் ‘பிச்சாகடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படம் 40 கோடிகளுக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


பிச்சைக்காரன் 2 ட்ரெயிலர்:


இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தை சசியோ வேறு இயக்குநர்களோ இயக்கப்போவதில்லை என்றும், விஜய் ஆண்டனியே இயக்குவார் என்றும் தகவல் வெளியானதுடன் படப்பிடிப்பு தொடங்கி மலேசியாவில் முன்னதாக நடைபெற்று வந்தது. காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடிப்பு, இயக்கம், இசை என பன்முகக் கலைஞராக இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி உருவெடுத்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. பிரபல தொழிலதிபர், குற்றவாளி, பக்திமான் என விஜய் ஆண்டனி ட்ரெய்லரில் தோன்றும் நிலையில், தங்கைக்காக பழி வாங்கும் படலம், விஜய் ஆண்டனியின் அசத்தலான தடதடக்கும் பின்னணி இசை ஆகியவை சுவாரஸ்யமூட்டும் வகையில் அமைந்துள்ளன.


 



இந்த ஆண்டு தொடக்கத்தில் லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி அவரது தாடை, மூக்கு எலும்புகள் உடைந்து அவர் படுகாயமடைந்த நிலையில், தொடர்ந்து அவர் விபத்திலிருந்து மீண்டு குணமாகி வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 


தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்து முன்னதாக பிச்சைக்காரன் 2 படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிச்சைக்காரன் 2 தன் ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை என்றும் தனக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு வேண்டுமென்றும் கோரியிருந்தார்.


மே 19 ரிலீஸ்:


படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்றும், பட வெளியீட்டைத் தள்ளி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னதாக தன் பதில் மனுவில் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.


 இந்நிலையில், பல பிரச்னைகளைத் தாண்டி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போது பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர் ரிலீஸாகி உள்ளது.