கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் முதல் நாள் நல்ல வசூலை எட்டியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிச்சைக்காரன் 2:


2016ஆம் ஆண்டு  விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பிச்சைக்காரன் படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக பிச்சைக்காரன் 2 தற்போது வெளியாகியுள்ளது.


அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான பிச்சைக்காரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தெலுங்கில் ‘பிச்சகாடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை என செண்டிமெண்ட், ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்து விஜய் ஆண்டனியின் இயக்கத்திலேயே வெளியாகியுள்ளது. நேற்று தெலுங்கிலும் பிச்சகாடு 2 என்ற பெயரில் இப்படம் வெளியானது.


18 கோடி வசூல்:


தமிழைவிட இப்படத்துக்கு தெலுங்கில் பிரம்மாண்ட ஓப்பனிங் அமைந்துள்ளதாக  தகவல் வெளியானது . இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சேர்த்து முதல் நாள் 6 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.


முதல் நாளான  தமிழில் 2.55 கோடிகளும், தெலுங்கில் 3.45 கோடிகளும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் தகவல் பகிர்ந்துள்ளது. முதல் நாளைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வார இறுதி நாட்களிலும் இந்தப் படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.


ரசிகர்கள் வரவேற்பு:


இரண்டாவது நாளில் இந்தியளவில் 5.65 கோடிகளும் மூன்றாவது நாளாக 6.3 கோடிகளும் வசூல் செய்துள்ளது.வெளியான நாளில் இருந்து இதுவரை மொத்தம் 17.95 கோடிகள் இந்தியா முழுவதிலும் வசூல் செய்துள்ளது பிச்சைக்காரன் 2 திரைப்படம். தொடர்ந்து இந்த வார வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிச்சைக்காரன் 2 படம் வசூலில் பணக்காரனாக மிளிரும் என்று எதிர்பார்க்கலாம்.  சுமார் 20 கோடிகள் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் முதல் நாளே 6 கோடிகள் வரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .தற்போது மொத்தம் மூன்று நாட்களில் 18 கோடி வரை படத்தின் வசூல் நெருங்கியிருக்கிறது. மேலும் அடுத்த வாரம் வரை படம் நல்ல வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. 


முன்னதாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் தன் ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை எனவும், இதற்காக விஜய் ஆண்டனி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தன் படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தனக்கு   பொருளாதார ரீதியாக இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.