மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மரக்காணம் காவல்துறையினர் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைத்த நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, மரக்காணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., நாளை முதல் குழுக்களாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்த இருக்கிறது. 12 பேரில் மதன் என்பவர் தவிர மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்
கள்ளச்சாராயம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார் குப்பத்தில் கடந்த மே 13ம் தேதி விஷ விசாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து இதுவரை குற்றவாளிகள் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடுத்த சில நிமிடங்களிலேயே விஷ சாராய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டார்.
முதலமைச்சர் நேரில் ஆறுதல்:
அப்போது உத்தரவிட்ட அவர், “ இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
மாற்றப்பட்ட வழக்கு:
இதனை தொடர்ந்து, விஷ சாராய வழக்கினை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட விசாரனை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. கோமதியும் செங்கல்பட்டு விசாரானை அதிகாரியாக மகேஸ்வரி நியமிக்கப்பட்டனர். இந்த சூழலில், இவ்வழக்கு தொடர்பான வழக்கு தொடர்பான ஆவணங்களை கோட்டகுப்பம் டி.எஸ்.பி. சுனில், விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி. கோமதியிடம் இன்று காலை ஒப்படைத்தார். தொடர்ந்து சிபிசி ஐ டி போலீசார் விஷ சாராய வழக்கு தொடர்பான ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் பெற்றுகொண்டதாகவும் வழக்கு விசாரனையை தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.