ரீல் விஜய்..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் மிகவும் தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றன. வடை சுடுவது, டீ ஆத்துவது, சட்டையை அயர்ன் செய்வது என ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள் வேட்பாளர்கள். மறுபுறம் தலைவர்களின் உருவ ஒத்துமை கொண்ட பலர் ஓட்டுக்கேட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினா ஓட்டு கேட்டு வருகிறார் என ஆச்சரியப்படுவதற்குள் அவரைப்போல ஒருவர் என மெதுவாக நடந்து செல்கிறார் ரீல் ஸ்டாலின்.
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக மதுரையில் சம்பவம் செய்தார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர். காரில் நின்றுகொண்டு பூமழை பொழிய கிட்டத்தட்ட விஜய் மாதிரியே ஒரு ஆள் ஓட்டு கேட்டார். கொஞ்சம் அசந்தால் விஜய்தானோ என நம்பும் அளவுக்கு அவரின் நடை உடை பாவனை அனைத்துமே இருந்தது. வடை சுடுவது, நின்றுகொண்டிருந்த பேருந்தில் மாஸ்டர் விஜய் போல ஓடி ஏறியது என ரகளை செய்தார் இந்த ரீல் விஜய். எது என்னவோ? யார் சார் இது? கிட்டத்தட்ட விஜய் போலவே இருக்கிறாரே என பலரும் அவரைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவர் வேறு யாரும் இல்லை. கேரளா பாலக்காடைச் சேர்ந்த ராஜேஷ் விஜய்.
ராஜேஷ் விஜய்..
ஒருநாள் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. தளபதி.. தளபதி.. என விஜய் ரசிகர்கள் போஸ்டுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர் விஜய் இல்லை. விஜய் போல ஒருவர் என ஒருபக்கம் உண்மையும் பரவியது. பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்து வைரலானார் இந்த ராஜேஷ் விஜய். அதன் பின்னர் கேரளாவில் ராஜேஷ் செலிபிரிட்டி தான். லோ பட்ஜெட் விஜயாக கடை திறப்பு, ரீல்ஸ் என பட்டையைக் கிளப்பி வருகிறார். அவரைப் பற்றி தெரிந்துகொண்ட நம்ம மதுரை தளபதி ரசிகர்கள் எலெக்ஷன் நேரத்தில் சரியாக களமிறக்கி ஓட்டு வேட்டையாட திட்டமிட்டுள்ளனர். அதுதான் நேற்று சம்பவம்.
ராஜேஷ் விஜயின் இன்ஸ்டா பக்கம் போனால் கொட்டிக்கிடக்கிறது வீடியோ.நீங்களும் பார்த்து ரசியுங்கள் இந்த ரீல்ஸ் விஜயை..