அப்பா, அண்ணன் போன்ற குணச்சித்திர கதாபாத்திரமோ அல்லது கோட்-ஷூட் போட்ட வொயிட் காலர்  வில்லன் கதாபாத்திரமோ எதுவாக இருந்தாலும் அதனை அத்தனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் நடிகர் ஜெயப்பிரகாஷ். தற்போது தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக தொழிலதிபராக இருந்தவர் ஜெயபிரகாஷ் . சீர்காழியை சேர்ந்த இவர் சிறுவயது முதலே தொழிலதிபராக வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்தவர். தனது கடந்த காலம் எப்படியாக இருந்தது, தான் எப்படி சினிமாவிற்கு வந்தேன் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 




அதில் ”சீர்காழி இப்போ இருந்ததை விட , 80 களில் ரொம்ப சின்ன ஊரா இருந்தது. நான் அங்க ஒரு மெடிக்கல் ஷாப்லதான் வேலை செய்தேன்.ஏதாவது ஒன்னு செய்யணும்னு தோணிக்கிட்டு இருந்தது. நான் பி.யூ.சி பண்ணும் பொழுதே படிப்பின் மீதான ஆர்வம் போயிடுச்சு . நான் படிச்சப்போதான் பி.யூ.சி கடைசி பேட்ஜ். எனக்கு சின்ன வயசுல எனக்கு சினிமா மீதான ஆர்வம் இல்லை. நான் வயதுக்கு உண்டான சேட்டைகள் செய்ய ஆரமித்தேன். அம்மாவிடம் நானே போய் சொல்லிட்டேன், நான் இனிமே கல்லூரிக்கு போக விரும்பவில்லை. நான் இப்போதே சின்ன சின்ன தப்புகள் பண்ண தொடங்கிட்டேன். கல்லூரிக்கு போனால் முழுமையாக மாறிடுவேனோன்னு பயமா இருக்கு என்றேன். அதன் பிறகு பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு  வேலை செய்ய முடிவெடுத்தேன். அப்படித்தான் உள்ளூர்ல வேலை பார்க்க தொடங்கினேன். அப்போ கிராமத்துல இருந்து அடுத்தக்கட்ட நகர்வுனா மெட்ராஸ்தான்.  முதல்ல மெடிக்கல் ஷாப்ல வேலை செய்தேன் . அதன் பிறகு மெட்ராஸ்ல இருந்த என்னுடைய கஸின்  என்னை  பெட்ரோல் பங்ல வேலைக்கு சேர்த்துக்கிட்டார்.


அதன் பிறகு பஸ்ஸில் செல்லும் பொழுதெல்லாம் ஒரு பெட்ரோல் பங்க் மோசமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். பல நாட்களுக்கு பிறகு அந்த பங்கின் முதலாளியிடம் சென்று , சார் நானே இதை எடுத்து நடத்தட்டுமா என நேரடியாக கேட்டேன். அவர் ரொம்ப நல்ல மனுஷன் சரினு சொன்னாரு. அங்கிருந்து அப்படியே இரண்டு பங்குகள் ஆரமித்தேன். அதன் பிறகு எல்லாரும் சென்னைக்கு வந்துட்டோம் . அதன் பிறகு சேரன் சார் மூலமாகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். முதல்ல சினிமாவில் நிலைப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகு ஒரு கதாபாத்திரம் மூலம் இன்னொரு கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு  கிடைத்து . இன்றைக்கு  முழுநேர நடிகராகவே மாறிவிட்டென் “ என தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்துள்ளார் ஜெயபிரகாஷ்.