‘பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவான கதை குறித்து இசையமைப்பாளர் இளையராஜா சுவாரஸ்யமாக கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சமீபத்தில் சந்தானம் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் டிக்கிலோனா. டைம் மிஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தது. அதைவிட, படத்தில் இடம்பெற்ற  ‘பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ என்ற ரீமிக்ஸ் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கமல்ஹாசன் நான்கு வேடங்களில் அசத்திய ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடலை, இந்த படத்தில் எந்த இசையையும் மாற்றாமல் யுவன் அப்படியே போட்டிருப்பார். இந்த ரீமிக்ஸ் பாடலின் லிரிக் வீடியோவாக வெளியானபோதே, அதிகம்பேர்  யூடியூபில் பார்த்தனர். தற்போது, வீடியோ வடிவில் வெளியான பிறகு பட்டிதொட்டியெல்லாம், இந்த பாடலே கேட்கிறது. ரீமிக்ஸ் பாடல் மகன் யுவன்சங்கர் ராஜா - ஒரிஜினல் பாடல் அப்பா இளையராஜா இசை என்று நெட்டிசன்கள் இணையத்தை தெறிக்கவிட்டனர்,



பழைய பாடலையும், புதிய பாடலையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் பழைய பாடலே சூப்பராக இருக்கிறது என்றும், சிலர் பழைய பாடலின் காட்சியமைப்புகள் புதிய பாடலில் இல்லையென்றாலும், பார்க்கும்படி எடுத்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர்.



 


இந்த நிலையில், இந்த பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.  பேர் வெச்சாலும் பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில், ஒரிஜினல் பாடல் உருவான கதை குறித்து எனது அப்பா கூறுகிறார் என்று யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாடல் உருவான விதம் இளையராஜா கூறுகிறார். பாடலுக்காக இளையராஜா சொன்ன சந்ததத்துக்கு, எப்படி இதுக்கு எழுதுவது என கவிஞர் வாலி கேட்க, திருக்குறளில் இருந்து ஒரு குறளை சொல்லி எழுதச் சொன்னேன் என்று கூறுகிறார் இளையராஜா. முழு வீடியோவை கீழே பார்க்கலாம்.