எந்த ஒரு கலை வடிவமாக இருந்தாலும் அதன் ஒரிஜினாலிட்டி தான் அதன் தனித்துவம். ஆனால், திரையுலகில் காப்பி பேஸ்ட் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அது போலவே தொழில்நுட்ப வளர்ச்சியால் பாட்டு, சீன், போஸ்டர் என எதை காப்பி அடித்தாலும் பொதுமக்களும் எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர். அட 60, 70களில் காப்பியடிக்கப்பட்ட படைப்புகளைக் கூட கண்டுபிடித்து புட்டு புட்டு வைக்கின்றனர் ரசிகர்கள். அவ்வளவு எளிதாக அவர்களை ஏமாற்றிவிட முடியாது. இருந்தாலும் கூட சில முறை சறுக்கிவிடுகின்றன சில படக்குழு.
அப்படியொரு சர்ச்சையில் தான் பேய் மாமா படக்குழு சிக்கியுள்ளது.
பேய் மாமா உருவான பின்னணி..
பேய் மாமா, இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதமே சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பேய் மாமா' திரைப்படத்தின் கதை இதுதான். தீய டாக்டர்கள் ஒரு வைரஸைப் பரப்பி நோயை உண்டாக்குகிறார்கள். அதில் பாதிக்கப்படும் ஒருவரை மூலிகையைத் தயாரிக்கும் ஒரு குடும்பம் காப்பாற்றுகிறது. இதனால் கோபமடைந்த அவர்கள் மூலிகை தயாரிக்கும் குடும்பத்தைக் கொன்று விடுகிறார்கள். இறந்தவர்கள் பேயாக யோகி பாபு மீது வருகிறார்கள்.
இந்தப் படத்தில் முதலில் நடிகர் வடிவேலுவே நடிப்பதாக இருந்தது. ஆனால், இம்சை அரசன்-2 படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் 2 வருடங்களாக புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார். இந்த இடைவெளியை யோகிபாபு பயன்படுத்திக்கொண்டார். வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபுவை இயக்குநர்கள் ஒப்பந்தம் செய்தனர். நயன்தாராவே சிபாரிசு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். கோலமாவு கோகிலா படத்தில் நயனுடன் அவர் டூயட்டே பாடிவிட்டார். சரி புகழின் உச்சியில் உள்ள யோகி பாபு நடித்துள்ள படம் சந்தித்துள்ள சர்ச்சை என்னவென்பதைப் பார்ப்போம்.
போஸ்டர் காப்பி..
பேய் மாமா படத்தின் போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் யோகிபாபு மட்டுமே திகில் பின்னணியில் நிற்பார். பார்ப்பதர்கு போஸ்டர் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் கூட இது இந்தியில் வெளியான பூத் 2 படத்தின் அப்பட்டமாக காப்பி என நெட்டிசன்கள் கூறுகின்றனர். பூத் 1 இந்தியில் விக்கி கவுஷல் இயக்கத்தில் வெளியான திரைப்படம். அந்தப் போஸ்டரும் பேய் மாமா போஸ்டரும் அச்சு அசல் ஒன்றாக இருப்பதாலேயே நெட்டிசன்கள் படக்குழுவை ட்ரோல் செய்து வருகின்றனர்.