திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்த காலத்திலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வரை, ரசிகர்கள் அனைவரும் பெரிய பெரிய ஹீரோக்களை மட்டும்தான் தலையில் வைத்து கொண்டாடி வந்தனர். ஆனால், இப்பொழுதோ கதை கொஞ்சம் கொஞ்சம் மாற ஆரம்பித்து விட்டது. மக்கள், நல்ல கதையுள்ள படங்களை தேடி கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.


அப்படி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல கதைகளை கொடுத்த இயக்குனர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுள், பத்துதல படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவும் விடுதலை பட இயக்குனர் வெற்றிமாறனும் அடங்குவர். இவர்களது படங்கள், இம்மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு படங்களில் யாருடைய படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது தெரியுமா?


பத்து தல:


கெளதம் வாசுதேவ் மேனனுடன் ‘மின்னலே' படத்தில் இணை இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் களமிறங்கியவர் கிருஷ்ணா. ‘சில்லுனு ஒரு காதல்’  படம் முலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம்தான் பத்துதல. சிம்பு ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் என பலர் நடித்துள்ளனர். இதுவே ரசிகர்களை ஒரு பக்கம் வலைத்துப்போட,இசைப்புயலின் இசையில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்களும் ரசிகர்களை வெறித்தனத்திற்கு தீனி போட்டுள்ளன. 




2017ஆம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியாகி வெற்றிநடை போட்ட மஃப்டி படத்தின் தமிழ் ரீ-மேக்தான் பத்து தல. படத்தின் கான்செப்டின் மீதும், நடிகர் சிம்புவின் மீதும் அப்படத்தில் நடித்துள்ள பிற நட்சத்திரங்கள் மீதும் ரசிகர்கள் பலத்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால், பத்து தல படம் கண்டிப்பாக வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


விடுதலை:


வெறித்தனமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போனவர், வெற்றிமாறன். தனது முதல் படமான பொல்லாதவன் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் இவர். தொடர்ந்து ஆடுகளம் படத்திலும் ஹிட் கொடுத்த அவர் விசாரணை, அசுரன் என நல்ல கதைகளை படமாக எடுத்தார். இவர் தற்போது இயக்கியுள்ள படம்தான் விடுதலை. 


திரையில் காமெடியனாக தோன்றி இதுவரை ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நடிகர் சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்காக, ஸ்பெஷலாக உடற்பயிற்சி செய்வது சண்டை பயிற்சி செய்வது என புதுமை காட்டினார், நடிகர் சூரி. படத்தின் ட்ரைலரிலும், கோபம்-பாவம் என விதவிதமான பாவங்களை காட்டி, ரசிகர்களை கவர்ந்துள்ளார். சூரியின் இந்த மாறுதல் அவரது திரைவாழ்வில் பெரிய  திருப்புமுனையாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 




விடுதலை vs பத்து தல:


பத்து தல படம் இம்மாதம் 30ஆம் தேதியும் விடுதலை படம் 31ஆம் தேதியும் வெளியாகின்றன. இரண்டு படங்களில் எது வெற்றி பெறும் என்ற போட்டியை விட, எந்த படம் மக்களின் மனதில் இடம் பிடிக்கும் என்ற எண்ணம்தான் பலரது மனங்களில் மேலோங்கி உள்ளது. பத்து தல படத்தின் இயக்குனர் இதுவரை இதுபோன்ற சண்டை கலந்த ஜனரஞ்சகமான படத்தை இயக்காதவர். அவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள பத்து தல படம், எப்படியிருக்குமோ என்ற கேள்வி பல ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளன.


அதே போல இயக்குனர் வெற்றிமாறனுக்கோ சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களை எடுப்பதும் புதிதல்ல. விடுதலை படமும் அவரது பிற படங்களை போல மக்களின் மனங்களில் பலமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமொன்றுமில்லை. இதனால், இந்த இரு படங்களுக்கு இடையேயான போட்டியில் வெற்றியை யார் பெறப்போவது என்பதை  ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.