சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், டீஜே, அனு சித்தாரா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’பத்து தல’. நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் படங்களை இயக்கிய கவனமீர்த்த இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கன்னட சினிமாவில் 2017ஆம் ஆண்டு வெளியான ’முஃப்தி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் சிலம்பரசன் ’ஏஜிஆர்’ எனும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வரும் மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் வெளியாகும் நிலையில், இன்று இந்தப் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பக்கா மாஸ் ட்ரெய்லர்
பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரில் ”துரோகமும் துரோகியும் இந்த ஏஜிஆருக்கு புதுசில்ல” எனும் சிம்புவின் மாஸான வசனம் கவனமீர்த்துள்ளது. சிம்பு ஏஜிஆர் எனும் டானாக நடித்துள்ள நிலையில் பத்து தல படம் சிம்பு ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பத்து தல இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அடுக்குமொழியில் கலகலப்பாகப் பேசியது கவனமீர்த்தது. இசையமைப்பாளர் ஏ,ஆர். ரஹ்மான், சிம்பு உள்பட அங்கிருந்தோர் டி.ராஜேந்தரின் பேச்சை ரசித்து சிரித்தனர்.
மேலும் முன்னதாக விஜய் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சிம்புவைப் பாராட்டி பேசிய வீடியோ பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்து சிம்பு கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதேபோல் சிம்பு முன்னதாக நடன இயக்குநர் சாண்டியுடன் இணைந்து தான் இசையமைத்துப் பாடி நடனமாடிய ’லவ் ஆந்தம்’ பாடலுக்கு இந்த விழாவில் ஆடியது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.