பத்து தல படத்திற்கு இந்தளவு வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான் காரணம் என நடிகர் சிலம்பரசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன்  பத்து தல படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ள நிலையில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள பத்து தல படம் நாளை (மார்ச் 30) உலகமெங்கும் வெளியாகிறது. 


இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கு சோகமளிக்கும் விதமாக அதிகாலை 5 மணி காட்சி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு தொடங்கும் நிலையில் பல இடங்களில் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது. முன்னதாக பத்து தல படம் கடந்தாண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.






கடந்த மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  இதில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு ரசிகர்களிடையே தோன்றி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஏற்கனவே படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்நிகழ்ச்சியில் சிம்புவின் பேச்சிலும் அனல் பறந்தது. குறிப்பாக “நான் வேற மாதிரி வந்துருக்கேன். ரசிகர்களாகிய உங்களை தலைகுனிய விட மாட்டேன். தமிழ் சினிமா பெருமைப்படும்படி நான் நடந்துப்பேன்” என அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் வைரலாகின. 


இந்நிலையில் பத்து தல படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்க எல்லாருக்கும் தெரியும். பத்து தல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்குன்னு சொல்றாங்க. இதுக்கு காரணம் என்னோட முன்னால் வெளியான படங்கள் ஹிட் என்பதோ, நான் என்பதோ இல்லை. நீங்கள் கொடுத்த அதரவு தான் காரணம். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். இன்னைக்கு இந்த படத்துக்கு இவ்வளவு ஆதரவு இருக்குதுன்னா அதற்கு காரணம் நீங்கள் தான். படம் நல்லபடியா வந்துருக்கு. உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு தேவை. நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.