பத்து தல படத்தில் நான் முதலில் நடிக்க மாட்டேன் என மறுத்தேன் என ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 


பத்து தல:


ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பத்து தல”. இந்த படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் மேனன், கலையரசன்  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கு இப்படமானது மார்ச் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. 


இதனிடையே பத்துதல படத்தில் இரண்டு பாடல்கள், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியான நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய  நடிகர் சிம்பு ரசிகர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து செய்து கொண்டார். 


கௌதம் கார்த்திக்தான் காரணம்:


“இந்தப் படம் ஆரம்பித்தபோது கஷ்டமான சூழலில் இருந்தேன். அப்போது நான் வீட்டுக்குள்ளேயே இருக்கேன் வெளிய வரமாட்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொன்னார். என்னடா ஒரு மனுஷன் வீட்டுல இருந்தாலும் பிரச்சினையா என நினைச்சேன். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து ஒரு படம் இருக்கு பண்ணனும் சொன்னார். ஏதோ கன்னட படத்தோட ரீமேக்ன்னு சொன்னாங்க. 


கன்னடத்துல சூப்பர் ஸ்டாரா இருக்குற சிவராஜ்குமார் நடிச்ச கேரக்டர்ல நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனால் இந்த படம் நடிக்க மிக முக்கிய காரணம் கௌதம்  கார்த்திக் தான். எனக்கு பிடித்திருந்தால்  சிறிய படம், பெரிய படம் என பார்க்காமல் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டுவேன். காரணம் இங்கு தட்டி விடுறதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுக்க யாருமே இல்லை. என்னை தட்டிக் கொடுக்க ரசிகர்கள் உள்ளனர். 


கௌதம் ஒரு நல்ல பையன்.  எனக்கு இந்த படம் வெற்றியாக அமையுமோ இல்லையோ, அவருக்கு கண்டிப்பாக அமையும். கௌதமுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என எண்ணினேன்” என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு தனது அப்பாவும் இயக்குநருமான டி.ராஜேந்தர் - அம்மா உஷா ஆகியோரோடு பங்கேற்றார். இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் #PathuThalaAudioLaunch என்ற ஹேஸ்டேக்கில் வைரலாகி வருகிறது.