பதான் படம்


மிகவும் பிரபலமான பாலிவுட் இயக்குனர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் ’பதான்’.


இப்படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறது. வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள்,இந்துத்துவ கும்பல் என பலரும் பெரும் கண்டனங்களை எழுப்பிவரும் நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி அப்பாடலில் சில மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். தியேட்டர் ரிலீசுக்கு முன்னர் திருத்தப்பட்ட பதிப்பு சமப்பிக்கப்படவேண்டும் என உத்தரவிட்டார். இப்படி பெரும் சர்ச்சை சிக்கியிருக்கும் பதான் படம் பற்றி பல விமர்சனங்கள், ட்ரோல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிவருகிறது.


சர்ச்சையில் சிக்கிய பாடல்


ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பதான். ஷாருக்கானின் பிறந்த நாளில் ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் பல சர்ச்சைகளை சந்தித்து கிளப்பி  வருகிறது;  


இந்த பாடல் முழுவதும் தீபிகா படுகோன் காவி நிறத்திலான பிகினி உடை அணிந்திருப்பதற்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள், இந்துத்துவ கும்பல் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருவதுடன் உருவப்படங்களை எரிப்பது, திரையிட கூடாது என மிரட்டல் விடுவதுமாக ஒருபுறம் இருக்க மறுபுறம் ஷாருக்கான் மற்றும் தீபிகாவிற்கு பல அந்தஸ்துகளை கொடுத்து கௌரவித்து வருகிறார்கள். இதுமட்டுமின்றி, மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ள பதான் படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என வழக்குகளும் தொடரப்பட்டது.


போராட்டம்


இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் இயங்கி வரும் ஆல்பா ஒன் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான்,  மற்றும் பிற நடிகைகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், படத்தின் போஸ்டர்கள், பெரிய அளவிலான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.






அப்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பு தொண்டர்கள் திடீரென உள்ளே நுழைந்து போஸ்டர்களை கிழித்து, வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், படம் திரையிடப்பட்டால், இதனை கடுமையான போராட்டம் நடத்தப்படம் என எச்சரிக்கை விடுத்து, கோஷங்களை எழுப்பினர். பஜ்ரங்தள அமைப்பு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு, தற்போது அவை சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.