தமிழில் ’என்னை அறிந்தால் ’, ’நிமிர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இது தவிர உத்தம வில்லன், நிமிர்ந்து நில், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாத உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் ‘83’ என்ற ஒரு படத்திலும் நடித்துள்ளார். அபுதாபி வாழ் மலையாள குடும்பத்தில் பிறந்த பார்வதி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பாபின்சு என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் எப்படியாவது தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என போராடி வரும் நடிகைகளுள் இவரும் ஒருவர். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் பார்வதி நாயர் , அவ்வபோது வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவும்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் பகுதி ஒன்றை துவங்கிய பார்வதி நாயரிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டனர். அப்போது ரசிகர் ஒருவர் “சினிமாவில் நிலைப்பதற்கு பணம் தேவையா அல்லது கிளாமர் தேவையா ?” என கேட்க, அதற்கு பதிலளித்த பார்வதி “சினிமா மட்டுமல்ல , எந்த துறையாக இருந்தாலும் தன்னம்பிக்கைதான் வேணும் “ என பதிலளித்தார். இதே போல மற்றொரு ரசிகர் “ "நெருக்கமான காட்சிகள் காரணமாக நீங்கள் அர்ஜுன் ரெட்டியை செய்ய மறுத்துவிட்டீர்கள் என்பது உண்மையா. இப்போது அதை நிராகரித்ததற்கு வருத்தப்படுகிறீர்களா?” என கேட்க. “ ஆமாம்! அது ஒரு அழகான படம், அதை நான் மிஸ் பண்ணிருக்க கூடாது, இருந்தாலும் உங்களை எல்லாம் மகிழ்விக்க இன்னும் அழகான படங்கள் வர காத்திருக்கு “ என பதிலளித்தார். அர்ஜூன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். அவருக்கு முன்னதாக படக்குழுவினர் பார்வதி நாயரைத்தான் படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதீத ரொமான்ஸ் காட்சிகள் படத்தில் இருப்பதனால் பார்வதி நாயர் அதனை கைவிட்டதாக செய்திகள் உலா வந்த நிலையில் , தற்போது அதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
பார்வதி நாயர் பத்தாம் வகுப்பு படித்த பொழுதே மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். மென்பொருள் பொறியியல் பட்டதாரியான இவர், தனது பெற்றோர் விருப்பத்திற்காகவே அதனை படித்ததாக தெரிவிக்கிறார். மேலும் “ சினிமாவை நீங்கள் தேர்வு செய்தீர்களா அல்லது சினிமா உங்களை தேர்வு செய்ததா” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ”சினிமாதான் என்னை தேர்வு செய்தது, ஆனால் இதில் நிலைக்க வேண்டும் என முடிவெடுத்தது நான் தான் “ என தெரிவித்துள்ளார்.