நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரபல நடிகை பார்வதி திருவொத்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமாக திகழ்ந்த நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை இந்திய சினிமாவில் ஏற்படுத்தியது. அந்தாண்டு பிப்ரவரி 17ம் தேதி கொச்சியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், அந்த நடிகை எர்ணாகுளத்தில் ஷூட்டிங்கை முடித்து விட்டு தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சினிமாவுலகில் நன்கு அறியப்பட்ட பல்சர் சுனில் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்து போலீசார் நடத்திய விசாரணையில் 5 மாதங்களுக்குப் பின் பிரபல மலையாள நடிகர் திலீப் கைதாகி சிறை சென்றார். நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்கள் என பலரும் சிக்கிய நிலையில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஹனி எம். வர்கீஸ் அளித்த தீர்ப்பில், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் இவ்வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
அதேசமயம் பல்சர் சுனில் உள்ளிட்ட முதல் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 12ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு எதிராக சதி செய்யப்பட்டதாக நடிகர் திலீப் கூறியுள்ளார்.
குவியும் கண்டனம்
இதற்கிடையில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை பார்வதி திருவொத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது நீதியா?.. என்றும் அவருடன் (பாதிக்கப்பட்ட நடிகை) என கூறிப்பிடுள்ளார். மேலும் அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தை மாற்றியது” என பார்வதி கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் பார்வதி வேதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் தீர்ப்புக்கு சொல்வதற்கு முன் தீர்ப்பு ஒன்று இருந்தால் மனித நேயத்தின் பெயரால் அதை நிரூபிக்க இன்று ஒரு நல்ல நாள் என பார்வதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.