கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் இன்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் 8 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீபிற்கு எதிராக போதிய ஆதாரமில்லாததால் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் 6 குற்றவாளிகள் ஆள்கடத்தல் , பாலியல் வன்புணர்வு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வரும் டிசம்பர் 12 ஆம் தேதி நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக விசாரணைக்குப் பின் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது
நடிகை கடத்தல் வழக்கு
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹைவேயில் மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி பாலியல் வற்புறுத்தல் செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி நடிகர் திலிபிற்கு நெருங்கிய நட்பு இருப்பது தெரியவரவே , ஒட்டுமொத்த நிகழ்வின் மாஸ்டர்மைண்டாக நடிகர் இருப்பது தெரியவந்தது. சக நடிகையுடன் திலீப் தகாத உறவில் இருந்ததை பாதிக்கப்பட்ட நடிகை திலிபீன் மனைவி மஞ்சு வாரியரிடம் சொன்னதாகவும் இதனால் நடிகையை பழிவாங்கவே திலீப் இந்த திட்டத்தை நிறைவேற்றியதாக தெரியவந்தது . கைது செய்யப்பட்ட திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்தார் நடிகர் திலீப்.
வழக்கில் முக்கிய திருப்பங்கள்
கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. நடிகர் திலீபிற்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்தவர்கள் மெளனமாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட வீடியோ இருந்த மெமரி கார்டை சட்டவிரோதமாக கையாளப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 2024 ஆம் ஆண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை ஜாமினில் வெளியிட்டது உச்ச நீதிமன்றம். இப்படி அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக இந்த வழக்கு ஒவ்வொரு கட்டத்திலும் திரும்பி வந்துள்ளது.
திலீப் விடுதலை
இன்று எர்ணாகுளத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீப்பளிக்கப்பட்டு திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்களுடன் திலீப் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு திலீப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 251 நபர்களிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை என்னவென்று டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.