உள்ளொழுக்கு
கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான டாக்குமண்டரி புனைவு Curry & Cyanide. ஒட்டுமொத்த கேரள மாநிலத்தையே உலுக்கிய ஜாலி ஜோசஃபின் பிரபலமான வழக்கை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் உருவானது. இந்தத் தொடரை இயக்கியதன் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தார் கிறிஸ்டோ டோமி. தற்போது அவர் இயக்கியுள்ள படம் உள்ளொழுக்கு. பார்வதி திருவோத்து மற்றும் ஊர்வசி இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மஞ்சும்மெல் பாய்ஸ் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 21ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த ஜூன் 10 ஆம் தேதி இப்படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளொழுக்கு டிரைலர்
கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் தான் இறந்துபோன தாம்ஸ் குட்டி என்பவரின் உடல் அவர் வீட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தாமஸ் குட்டியின் மனைவியாக பார்வதி திருவோத்துவும் அம்மாவாக ஊர்வசியும் நடித்துள்ளார்கள். தாமஸ் குட்டியின் உடலை தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்கிறார் ஊர்வசி. ஆனால் அதற்கு வெள்ள நீர் வடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். இறந்த தாமஸ் குட்டியின் உடல் இந்த வீட்டில் இருக்கும் அதே நேரத்தில் மருமகளான பார்வதிக்கும் மாமியார் ஊர்வசிக்கும் இடையில் பல்வேறு உண்மைகள் வெளிவருகின்றன.
தனது மகனின் குழந்தையை சுமக்கும் பார்வதி அவனுடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தாரா என்கிற உண்மையில் தொடங்கி, தனது காதலன் உடன் சேருவதற்கான தன் மகனை பார்வதி கொன்றிருப்பார் என்கிற அளவுக்கு செல்கிறது ஊர்வசியின் சந்தேகம். இரண்டு பெண்களை மையமாக வைத்து நடக்கும் இந்தக் கதையில் சமரசப் புள்ளி என்பது என்ன என்பது இப்படத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்பது இந்த படத்தின் கேள்வியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பாராட்டுக்களைப் பெறும் ஊர்வசி பார்வதி நடிப்பு
இவ்வளவு ஆழமான ஒரு கதைக்கு ஏற்ற வகையில் இரண்டு நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பொதுவாக ஊர்வசி காமெடி காட்சிகளில் அதிகம் பாராட்டப்பட்டாலும், எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்கடித்துவிடக் கூடியவர். சமீபத்தில் வெளியான ஜே பேபி படம் வரை எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பை நாம் பார்த்து வருகிறோம். அதே நேரம் மறுபக்கத்தில் மலையாளத் திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் பார்வதி திருவோத்து. கதைத் தேர்விலும் சரி நடிப்பிலும் சரி பார்வதி படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த இரண்டு நடிகைகளுக்கு இடையிலான ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் கலந்த படமாக உள்ளொழுக்கு படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்