அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மலையாள திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களில் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தை  பகிர்ந்து  வருகிறார்கள்.


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு


அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.


 இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல தமிழ் நடிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.  தமிழ் , இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பக்தியில் திளைத்துள்ளார்கள். இந்த நிகழ்வு இந்திய சரித்திரத்தில் ஒரு மிகப்பெரும் நாளாக, எட்டுவதற்குரிய ஒரு சாதனையாக கருதப்படுகிறது. 


அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டிய மலையாள திரையுலகினர்






இப்படியான நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை பார்வதி, ரிமா கலிங்கல், இயக்கு ஜியோ பேபி, ஆஷிக் அபு உள்ளிட்டவர்கள்  இந்திய அரசியல் சாசனத்தில் முகப்பு பக்கத்தை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.






 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில்  இறையாண்மை , சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.